மதுரை – சென்னை தேஜாஸ் விரைவு ரெயில் சேவை தொடக்கம்; முக்கிய தகவல்கள்:-

Read Time:4 Minute, 40 Second

சர்வதேச தரத்திலான 22 சிறப்பு அம்சங்கள் இடம்பெற்ற மதுரை – சென்னை தேஜாஸ் விரைவு ரெயில் சேவையை பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தொடங்கிவைத்தார். மதுரையிலிருந்து சென்னைக்கு இந்த ரெயிலில் ஆறரை மணி நேரத்தில் செல்லலாம்.

சர்வேதேச தரத்தில் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்ட தேஜாஸ் ரெயில் பெட்டிகள் சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப்ல் தயாரிக்கப்பட்டது. ரெயிலில் மொத்தம் 15 குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் உள்ளன. எப்ஆர்பி தகடுகளால் ஆன அழகிய உட்புறத் தோற்றத்துடன் ரெயில் மிகவும் அழகாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில், சொகுசாக அமர்ந்து பயணம் செய்ய வசதியாக இருக்கைகளும் உள்ளன. அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கன்னியாகுமரி வந்த பிரதமர் நரேந்திரமோடி காணொளி மூலம் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மதுரையிலிருந்து ரெயில் தன் பயணத்தை தொடங்கியது.

ரெயில் பற்றி முக்கிய தகவல்கள்:-


* புதிய தேஜாஸ் விரைவு எக்ஸ்பிரஸ் 22672/22671 மதுரை மற்றும் சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படுகிறது.


* வாரத்தில் வியாழன் கிழமை தவிர மற்ற 6 நாட்களிலும் இந்த ரெயில் இயக்கப்படும்.


* சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த சொகுசு ரெயில் (22671) மதியம் 12.30 மணிக்கு மதுரை சென்றடையும். மதுரையில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு (22672) இரவு 9.30 மணிக்கு எழும்பூரை அடையும்.


* மொத்தம் 485 கிலோ மீட்டர் தொலைவை மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரெயில் ஆறரை மணி நேரத்தில் சென்றடையும்


* திருச்சி, கொடைக்கானல் ரோடு ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.


* இந்த ரெயில் சிசிடிவி, Wi-Fi வசதிகள் மற்றும் ஆடம்பரமான இருக்கைகளை கொண்டுள்ளது. உயர் வகுப்பு பெட்டியில் 56 பேரும், இருக்கை வசதி கொண்ட பெட்டிகளில் தலா 78 பேரும் பயணிக்கலாம்.


* ஒவ்வொரு இருக்கையின் பின்புறமும் சிறிய வீடியோ திரைகள், தானியங்கி டீ, காபி இயந்திரங்கள், ஜிபிஎஸ் வசதி, எல்ஈடி விளக்குகள், பெட்டியின் உட்புறமும் வெளிப்புறமும் தானியங்கி கதவுகள், பயணிகள் இருக்கைகளின் கைப்பிடியில் உள்புறம் மடக்கி அமைக்கப்பட்டுள்ள வெளியே தெரியாத சிற்றுண்டி மேசைகள், செல்போன் சார்ஜர் வசதி, கழிவறை கண்ணாடிகளில் தொடுதிறன் சுவிட்ச் கொண்ட எல்ஈடி விளக்கு உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் ரெயிலில் இடம்பெற்றுள்ளன.


கட்டணம் விபரம்:-

மதுரையில் இருந்து சென்னைக்கு ‘எக்சிகியூடிவ்’ வகுப்புக்கு ரூ.2,295, சேர்கார் இருக்கை வகுப்புக்கு ரூ.1,195 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படும். மதுரையில் இருந்து திருச்சிக்கு முறையே ரூ.1,080 மற்றும் ரூ.535 கட்டணமாகவும், கொடைரோட்டுக்கு ரூ.650 மற்றும் ரூ.325 கட்டணமாகவும் வசூலிக்கப்படும்.

மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து திருச்சிக்கு எக்சிகியூடிவ் வகுப்புக்கு ரூ.1,655 மற்றும் சேர்கார் இருக்கை வகுப்புக்கு ரூ.830 கட்டணமாகவும், கொடைரோட்டுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.980 கட்டணமாகவும், மதுரைக்கு ரூ.2,110 மற்றும் ரூ.1,035 கட்டணமாகவும் வசூலிக்கப்படும். இந்த கட்டணம் ஜி.எஸ்.டி. மற்றும் உணவுக்கும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. உணவு வழங்க வேண்டாம் என்றால் மதுரையில் இருந்து புறப்படும் ரெயிலுக்கு ரூ.1,940 மற்றும் ரூ.895 கட்டணமாக வசூலிக்கப்படும்.

ராமேசுவரம் – தனுஷ்கோடி இடையே ரூ.208 கோடி மதிப்பில் அமையவுள்ள புதிய ரெயில் திட்டத்துக்கும், ரூ.250 கோடியில் புதிதாக பாம்பன் பாலம் கட்டவும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.