இந்திய விமானி அபிநந்தன் ஓட்டிய மிக்-21 ஒரு ‘பறக்கும் சவப்பெட்டி’…

Read Time:7 Minute, 42 Second

இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்குவதற்கு காரணமாக இருந்த மிக்-21 விமானம் இந்தியாவில் நடந்த விமான விபத்துக்களுக்கு முதுகெலும்பாக இருக்கின்றது.

கடந்த 1966-ம் ஆண்டில் ரஷ்யாவிடம் இருந்த வாங்கப்பட்டது மிக்-21 ரக போர் விமானங்கள் பழமையான தொழில்நுட்பம், கோளாறு உள்ளிட்ட பல காரணங்களால் விபத்தில் சிக்கி உயிர்களை காவு வாங்குகிறது. இந்திய விமானப்படையின் விபத்துக்கள் என்று கூகுளில் தேடினால் அதிர்ச்சியளிக்கும் வகையில் தகவல்கள் கிடைக்கிறது. விமான விபத்துக்களில் சிக்கிய விமானங்களில் பல இந்த மிக் ரக விமானங்கள்தான்.


2012-ம் ஆண்டு அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்த தகவலில் 1971 முதல் 2012 ஏப்ரல் வரையில் மட்டும் 482 மிக் விமானங்கள் விபத்துக்குள் சிக்கியுள்ளது, 171 விமானிகள், 39 பொதுமக்கள், 8 பணியாளர்களின் உயிரை வாங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அப்போதைய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி பாராளுமன்றத்தில் தெரிவிக்கையில், விபத்துக்களால் மிக்-21 விமானங் கள் எண்ணிக்கை 872 எனப் பாதியாகக் குறைந்து வீணாகி விட்டதாக தெரிவித்திருந்தார்.


மார்ச் 2016-ம் ஆண்டு மத்திய அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்த தகவலில் 2012 ஏப்ரல் மற்றும் 2016 மார்ச் வரையில் 28 விமானப்படை விமானங்கள் விபத்தில் சிக்கியுள்ளது. இதில் 8 விமாங்கள் மிக்-21 விமானமாகும், 6 இதில் அப்கிரேட் வெர்ஷனான மிக்-21 பிசோன் ஆகும். இதுவரையில் 500க்கும் மேற்பட்ட விமானங்கள் விபத்துக்களில் சிக்கியுள்ளது.


‘பறக்கும் சவப்பெட்டி’

இந்தியாவின் முப்படைகளின் தேவைகளை நிர்வர்த்தி செய்யவில்லை என்றால் விளைவுகள் நேரிடும் என்றும், மத்திய அரசை விமர்சனம் செய்தும் முன்னாள் ராணுவ அதிகாரிகள் மற்றும் பணியில் இருந்தவர்கள் விமர்சனம் செய்யும் செய்திகளும் கூகுளில் கிடைக்கிறது. மிக் 21 ரக விமானங்களை விமானப்படையினர்

‘பறக்கும் சவப்பெட்டி’ எனவும் ‘விதவை தயாரிப்பாளர்’ என்றும் பெயரிட்டு அழைக்கின்றனர்.

அந்த அளவிற்கு அதனுடைய விளைவுகள் இருக்கிறது. 2020-ல் அதிநவீன தொழில்நுட்பம் நிறைந்த விமானங்களுக்கு மத்தியில் 50 ஆண்டு பழமையான இந்த விமானம் இந்திய விமானப்படையில் செயல்பட்டு வருகிறது.

விபத்தில் சிக்கிய மிக் விமானம்.

1966-களில் ரஷியாவிடம் மிக் ரக விமானங்கள் வாங்கப்பட்ட போது அவை உலகின் தலைசிறந்ததாகவும் பெருமை வாய்ந்ததாகவும் அமைந்திருந்தன. பிற்காலங்களில் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட குண்டுகளும், எலக்ட்ரானிக் கருவிகளும் மிக்-21 விமானத்திற்கு முழுமையாகப் பொருந்தவில்லை. கோளாறுகள், விபத்துக்கள் ஏற்பட்டன. விமானிகள் பலியாவதும், உயிர் பிழைப்பதும் அதில் ஏற்படும் கோளாறுகளின் வகையை பொறுத்தது என்றாகியுள்ளது.

பாகிஸ்தானுடன் மோதல் போக்கு காணப்படும் போதுதான் முப்படைகளில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக முக்கியமாக பேசப்படுகிறது. மற்றப்படி முக்கியத்துவம் எதுவும் கொடுக்கப்படுவது கிடையாது என முன்னாள் அதிகாரிகள் விமர்சனம் செய்கிறார்கள். மிக்-21 எஞ்ஜின் திடீர் என அணைந்தால் விமானியின் அதிவேக செயல்திறமையால் தன் இருக்கையின் ஒரு பொத்தானை அழுத்துவார். இதில், விமானத்தின் மேல்புற கதவு திறந்து அதில் தனது இருக்கையுடன் விமானி எகிறி வெளியேறி விடுவார். இந்த வகை போர்விமானம், பயிற்சியின் போது சிலசமயம் விபத்துக்குள்ளாகி விடுகிறது என்கின்றனர்.

அபிநந்தன்.

60 நாடுகளில் காணப்பட்ட இவ்விமானம் இப்போது சிறிய நாடுகளின் பயன்பாட்டில் மட்டுமே உள்ளது. மிக்-21 விமான தயாரிப்பை ரஷ்யா 1985-ல் நிறுத்தி விட்டது. மிக்-21 ரக விமானங்களின் கோளாறுகளை கார்கில் போருக்கு பின் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு கருத்தில் கொண்டது. இதன் பிறகு மிக்-21 விமானத்திற்கு ஈடாக வேறுவகை போர் விமானங்கள் வாங்க முடிவு எடுக்கப்பட்டது. ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானம், நீண்ட காலமாக விமானப்படையில் உள்ள மிக்-21 விமானங்களுக்குப் பதிலாக விமானப்படைக்கு வலுச்சேர்க்கும் என தெரிவிக்கப்பட்டது.


போருக்கு தயாரானது இந்தியாவின் முதல் உள்நாட்டு தயாரிப்பு இலகுரக தேஜஸ் விமானம்…!


சமீபத்தில்தான் இந்தியாவின் முதல் உள்நாட்டு தயாரிப்பு விமானமான இலகுரக தேஜஸ் விமானப்படையில் இணைக்கப்பட்டது. இதற்கிடையே இந்திய விமானப்படையில் விமானங்கள் விபத்து எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இந்திய விமானப்படைக்கு வாங்க முடிவு செய்யப்பட்ட ரபேல் விமானம் ஊழல் புகாரில் சிக்கியுள்ளது. இந்தியாவில் அதிகமான தேவை உள்ளது என 126 வாங்க காங்கிரஸ் அரசு திட்டமிட்டதை, பா.ஜனதா அரசு 36 ஆக குறைத்து உள்ளது. இதுவும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.


பாகிஸ்தானின் எப் 17 விமானத்தை ஏவுகணை வீசி சுட்டு வீழ்த்திய அபிநந்தன்…


மிக்-21 விமானத்தில் சென்றுதான் இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தானின் எப் 17 விமானத்தை வீழ்த்தியுள்ளார். அப்போதுதான் அவருடைய விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக கூறுகிறது. பாகிஸ்தானின் எப் 17 விமானம் அமெரிக்க தயாரிப்பாகும், அதிநவீன ரேடார் மற்றும் நேவிகேஷன் உள்ளிட்ட கட்டமைப்பை கொண்டு உள்ளது.இந்நிலையில் இப்போதைய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப விமானப்படைக்கு பலம் சேர்க்கும் விமானங்கள் வாங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இப்போதைய தேவைக்கு ஏற்ப 400 விமானங்களை வாங்க வேண்டும் என்கிறார் விமானப்படையின் மேற்கு பிராந்திய முன்னாள் ஏர் மார்ஷல் பாட்டியா.