கூகுளால் பெருமைப்படுத்தப்பட்ட தமிழக அரசு பள்ளி மாணவி!

Read Time:2 Minute, 35 Second

ஏடிஎம் மெஷினில் புதிய கண்டுபிடிப்பை அறிமுகம் செய்தற்காக தமிழக அரசு பள்ளி மாணவியை கூகுள் நிறுவனம் பாராட்டியுள்ளது. 

கல்வியில் தொழில்நுட்பத்தை சரியான கோணத்தில் இணைத்து, பயிற்றுவிக்கும் பட்சத்தில் எங்கும் ஆரோக்கியமான மாற்றம் நிகழும். கூகுள், நாசா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பள்ளி மாணவர்களின் திறனை ஒவ்வொரு நிலையிலும் பாராட்டி அவர்களுக்கான ஊக்கத்தையும் கொடுத்து வருகிறது. தமிழக அரசுப்பள்ளி மாணவர்களும் சிறப்பித்து வருகிறார்கள். கூகுள் நிறுவனம் டூடுள் போட்டியை போன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஈடுபாடு கொண்ட மாணவர்களின் சிந்தனை திறனை ஊக்குவிக்கும் வகையிலும் போட்டியை நடத்துகிறது. 

ஆன்லைன் தேர்வு முறையிலான இப்போட்டியில் எந்தப் பகுதியை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் பங்கேற்கலாம். இப்போட்டியில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மாநகராட்சி பள்ளி மாணவி தர்ஷினி கலந்துக்கொண்டார். அவருடைய அறிவியல் கண்டுபிடிப்பிற்கு, கூகுள் நிறுவனம் பாராட்டு தெரிவித்து அங்கீகரித்திருக்கிறது.

அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி தர்ஷினி ஏ.டி.எம் மெஷினில் ரூபாய் நோட்டுகள் வருவதைப் போல, காயின்கள் தரும் காயின் வெண்டிங் மிஷினைக் கண்டுப்பிடித்திருக்கிறார். தர்ஷினியின் அறிவியல் ஆர்வத்தை புரிந்துக் கொண்ட ஆசிரியர் சரவணன் மாணவியை கடந்த டிசம்பரில் நடந்த கூகுளின் அறிவியல் திறனாய்வு போட்டியில் கலந்துக்கொள்ள ஊக்குவித்திருக்கிறார். மாணவி தர்ஷினி கண்டுபிடிப்பு தொடர்பான வீடியோ பதிவையும் கூகுள் நிறுவனத்துக்கு அனுப்பியிருந்தார்.  

அதற்கு ஒப்புதல் அளித்து சான்றிதழ் வழங்கிய கூகுள் நிறுவனம், “உலகம் முழுவதும் உள்ள மக்கள் பயன் அடையும் வகையிலான உங்கள் யோசனையை தெரிவித்தமைக்கு நன்றி” என தர்ஷினியைப் பாராட்டியிருக்கிறது.