பயங்கரவாதி மசூத் அசார் சாவு… இந்திய விமானப்படை தாக்குதலில் சிக்கினானா?

Read Time:4 Minute, 52 Second

இந்தியாவில் பல்வேறு தாக்குதலை நடத்திய பயங்கரவாதி மசூத் அசார் உயிரிழந்தான் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய பாராளுமன்றத்தில் 2001 டிசம்பர் 13-ம் தேதி ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். 5 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வேட்டையாடியது. இப்போதைய புல்வாமா தாக்குதல் வரையில் இந்த இயக்கம் இந்தியாவில் பல்வேறு தாக்குதலை நடத்தியுள்ளது. காஷ்மீரில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தும் இந்த இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் ஆவான்.

கந்தகார் விமான கடத்தலின் போது இந்தியாவின் பிடியிலிருந்து தப்பிய அவன் இந்தியாவில் நடத்தப்பட்ட தாக்குதல் எல்லாவற்றுக்கும் மூளையாக செயல்பட்டுளான். இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத தாக்குதலில் தேடப்படுபவன் ஆவான். 2002-ம் ஆண்டில் இந்த இயக்கம் தடை செய்யப்பட்டாலும் பாகிஸ்தானில் செயல்பட்டுதான் வருகிறது. அவனும் சுதந்திரமாக சுற்றித் திரிந்தான்.

பயங்கரவாதி மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்திய அரசு மேற்கொண்ட முயற்சியை பாகிஸ்தான் நட்பு நாடான சீனா தடுத்தது. இந்நிலையில் கடந்த 26-ம் தேதி இந்திய விமானப்படை எல்லைத் தாண்டி சென்று ஜெய்ஷ் பயங்கரவாத இயக்கத்தின் மூன்று முகாம்களை அழித்தது. இதனை அவ்வியக்கமே ஒப்புக்கொண்டுள்ளது. இதில் பல பயங்கரவாதிகள் இறந்ததாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் கவலை

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மஹ்முத் குரேஷி பேசுகையில் ‘‘மசூத் அசார் பாகிஸ்தானி்ல் தான் இருக்கிறார். ஆனால் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு அவரது உடல்நிலை மோசமாக உள்ளது. அதேசமயம் புல்வாமா தாக்குதல் தொடர்பாக இந்தியா தரப்பில் உறுதியான ஆதரங்களை தந்தால், அது பாகிஸ்தான் நீதிமன்றம் ஏற்கும் வகையில் இருந்தால் நாங்கள் மக்களை சமாதானம் செய்ய முடியும்’’ என்றார்.

இந்தநிலையில், மசூத் அசார் பற்றி பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், அடிக்கடி டயாலிசிஸ் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ராவல் பிண்டி நகரில் உள்ள ராணுவ மருத்துவமனையிலேயே அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஜெய்ஷ் – இ-முகமது அமைப்புக்கு தேவையான உதவிகளை பாகிஸ்தான் ராணுவம் செய்து வருவதாக புகார் உள்ள நிலையில் பயங்கரவாதி மசூத் அசாருக்கு நேரடியாக ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியது.

மசூத சார் சாவு

இந்நிலையில் பயங்கரவாதி மசூத் அசார் உயிரிழந்தான் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் மசூத் அசார் காயம் அடைந்து, மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டான் என தகவல்கள் வெளியாகியது. உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துவிட்டான் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக இத்தகவல் உறுதி செய்யப்படவில்லை.

பாகிஸ்தான் நாடகமா?

மசூத் அசார் விவகாரத்தில் பாகிஸ்தான் சர்வதேச நாடுகளின் அழுத்தத்தை சம்பாதித்து வருகிறது. இந்நிலையில் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது பாகிஸ்தானின் நாடகமா? என்ற கேள்வியும் எழுகிறது. ஏற்கனவே பொய் செய்திகளை பரப்பிய பாகிஸ்தான், உயிரிழந்துவிட்டான் என பொய்யை பரப்புகிறதா? என்ற சந்தேகமும் எழுகிறது. இந்திய விமானப்படையின் தாக்குதலில் உயிரிழந்து இருந்தான் என்றால் இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இருக்கும். இவனை வைத்து இந்தியாவிற்கு எதிராக மறைமுக போரை நடத்திய பாகிஸ்தானுக்கு மேலும் கவலையை சேர்க்கும்.