சர்வ மங்கலங்களையும் அருளும் சிவராத்திரி திருநாள்…!

Read Time:9 Minute, 23 Second

சிவராத்திரி இந்துக்களின் முக்கிய பண்டிகை ஆகும். சிவனுக்கு உகந்த சிவராத்திரி முக்கிய விரத நாளாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அம்பாள் வழிபாட்டுக்கு உகந்தவை நவராத்திரிகள் என்றால், அரனாருக்கு உகந்தது ஒரு ராத்திரி; அதுவே மகிமைகள் பல கொண்ட புண்ணிய சிவராத்திரி. ‘சிவம்’ என்றால் மங்கலம் என்று பொருள். ஆக, சர்வ மங்கலங்களையும் அருளும் அற்புதமான திருநாள் ‘சிவராத்திரி’ திருநாள். மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளே `மகா’ சிவராத்திரி.

இதையே மகா சிவராத்திரியாகப் போற்றிக் கொண்டாடுகிறோம். ‘ராத்திர’ என்ற சொல்லுக்கு யாவும் செயலற்று ஒடுங்குதல் என்று பொருள். அதாவது, உயிர்கள் செயலற்று சிவபெருமானுக்குள் ஒடுங்கும் காலமே சிவராத்திரி. ஆகவே, இந்த புண்ணிய காலத்தில் சிவநாமம் சொல்லி, நான்கு கால பூஜைகள் செய்து வழிபடுவது விசேஷம். இதனால், இம்மையில் சுகானந்த வாழ்வையும், மறுமையில் சுகப் பேரானந்த வாழ்வையும் பெற்றுச் சிறக்கலாம். மார்ச் 4-ம் தேதி சிவராத்திரியாகும். இந்தத் திருநாளின் மகத்துவத்தை புராணங்கள் கூறுகின்றன!

பார்வதி செய்த சிவ வழிபாடு

ஒருமுறை பிரளயம் ஏற்பட்டு, படைப்புகள் அனைத்தும் சிவபெருமானுக்குள் ஒடுங்கின. இருள் சூழ்ந்த அந்த காலத்தில் பார்வதி சிவபெருமானை ஆகமங்களில் கூறியுள்ள படி நான்கு காலம் வழிபட்டாள். அவ்வாறு பார்வதியால் வழிபட்டதன் நினைவாக தொடர்ந்து சிவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த இருளில் பார்வதி தேவி பரமனை நோக்கி இந்நாளில் நான் எவ்வாறு வழிபட்டேனோ அப்படியே வழிபடுவோருக்கு இப்பிறவியில் செல்வமும், மறுபிறவியில் சொர்க்கமும் இறுதியில் மோட்சமும் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். பரமசிவனும் அப்படியே ஆகட்டும் என்று அருள்பாலித்தார். அதன்படியே அன்று முதல் சிவராத்திரி சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

உமாதேவி சிவபூஜை.

இப்படி பார்வதிதேவி தொடங்கிய சிவராத்திரி புண்ணிய வழிபாடு இன்றைக்கும் தொடர்கிறது.

உலகம் இருண்டது!

ஒரு முறை கயிலையில் விளையாட்டாக, எம்பெருமானது திருவிழிகளைத் தம் திருக்கரங்கள் கொண்டு மூடினார் உமாதேவியார். அகில உலகமும் இருண்டது. இக்குற்றத்திற்குப் பிரயச்சித்தமாக, ஆகம விதிகளின் படி, சிவனாரை, உமாதேவியார் வழிபட்ட தினம். ருத்திரர்கள் ஒன்றுசேர்ந்து, உலகின் இன்னல் நீங்க சிவபெருமானை அர்ச்சித்து வழிபட்டனர். அதன் நினைவாகவே சிவராத்திரி அனுஷ்டிக்கப்படுவதாகச் சொல்வார்கள்.

பாற்கடலும், சிவராத்திரியும்…

தேவர்களும் அசுரர்களும், பாற்கடலைக் கடைந்த போது வெளிவந்த ஆலகால விஷத்தை உலகைக்காக்க வேண்டி சிவனார் அருந்தினார்.

உடனே, அருகிருந்த உமாதேவியார், தம் திருக்கரத்தினால், சிவனாரின் கழுத்தை பிடித்து, விஷத்தை எம்பெருமானின் திருக்கழுத்திலேயே நிறுத்தினார். அகில உலகத்துக்கும் அன்னையான அம்பிகை, எம்பெருமானை மட்டும் காக்க வேண்டியா அவ்வாறு செய்தார்?, எம்பெருமான் இவ்வுலகம் முழுவதிலும் வியாபித்திருப்பவர். ஈரேழு பதினாலு உலகங்களும் எம்பெருமானின் திருவுருவே. எம்பெருமானுக்குள்ளேயே அனைத்து ஜீவராசிகளும் வாசம் செய்கின்றன.

சிவன்.

ஆகவே ஆருயிர்களுக்கெல்லாம் அன்னையான அம்பிகை அவ்வாறு செய்தார். அதனாலேயே, எம்பெருமானுக்கு திருநீலகண்டன் என்ற திருநாமம் உண்டாகியது. இந்த இறைலீலை நிகழ்ந்த தினமே சிவராத்திரி. அன்றைய தினத்தில் தேவாதி தேவர்களும் எம்பெருமானைப் பூஜித்து வழிபட்டனர்.

முசுகுந்தச் சக்கரவர்த்தி…

சிவராத்திரி தினத்தன்று, ஒரு வில்வமரத்தின் மேல் அமர்ந்திருந்த குரங்கு, இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து, வில்வ இலைகளைப் பறித்து, அந்த மரத்தின் கீழே போட்டுக் கொண்டிருந்தது. அந்த மரத்தடியில் அச்சமயம், சிவனாரும் உமையம்மையும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். குரங்கு அறியாமல் செய்த பூஜையை ஏற்று, சிவனார், மறுபிறவியில் முசுகுந்தச் சக்கரவர்த்தியாகப் பிறக்க அருள் செய்தார். தன்னை அறியாமல் செய்த பூசனைக்கு இவ்வளவு பலன் என்றால், நமக்கு எவ்வளவு பலன் கிடைக்கும் என்று யோசித்து பாருங்கள்…..

மகாசிவராத்திரியன்று இரவில் முறைப்படி விரதம் இருந்து சிவனை வழிபட்டால் கோடி பிரம்மஹத்தி தோ‌ஷம் விலகும். சிவலோக வாசம் கிட்டும். காசியில் முக்தி அடைந்த பலன் கிடைக்கும். சகல செல்வங்களும், நிறைந்த மங்கள வாழ்வு உண்டாகும் என சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

சிவராத்திரி அபிஷேகம்

மகா சிவராத்திரியில் இறைவனுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். அப்போது ஒவ்வொரு ஜாமத்தின் போதும், அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஜாமத்திலும் செய்யப்படும் அபிஷேக, அர்ச்சனைகளைப் பார்க்கலாம்.

முதல் ஜாமம்: பஞ்ச கவ்ய அபிஷேகம், சந்தனப் பூச்சு, வில்வம், தாமரை அலங்காரம், அர்ச்சனை, பச்சைப் பயறுப் பொங்கல் நிவேதனம், ரிக்வேத பாராயணம்.

அபிஷேகம்.

இரண்டாம் ஜாமம்:சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த ரவை, பஞ்சாமிர்த அபிஷேகம், பச்சைக்கற்பூரம், பன்னீர் சேர்த்து அரைத்துச் சாத்துதல், துளசி அலங்காரம், வில்வம் அர்ச்சனை, பாயசம் நிவேதனம், யஜூர் வேத பாராயணம்.

மூன்றாம் ஜாமம்: தேன் அபிஷேகம், பச்சைக் கற்பூரம் சாத்துதல், மல்லிகை அலங்காரம், வில்வம் அர்ச்சனை, எள் அன்னம் நிவேதனம், சாமவேத பாராயணம்.

நான்காம் ஜாமம்: கருப்பஞ்சாறு அபிஷேகம், நந்தியா வட்டை மலர் சாத்துதல், அல்லி, நீலோற்பவம், நந்தியா வர்த்தம் அலங்காரம், அர்ச்சனை, சுத்தான்னம் நிவேதனம், அதர்வண வேத பாராயணம்.

ஐந்து வகை சிவராத்திரி

சிவனுக்கு உகந்த ராத்திரியான சிவராத்திரி ஐந்து வகைப்படும். அவை மகா சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஐந்து வகையான சிவராத்திரிகள்:-

மகா சிவராத்திரி: மாசி மாதத்தில் தேய்பிறையில், கிருஷ்ணபட்ச சதுர்த்தசி அன்று வருவது மகா சிவராத்திரி எனப்படும். அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் முக்தியை அடைவார்கள் என்பது இதற்கான பலனாகும்.

யோக சிவராத்திரி: திங்கட்கிழமை முழுவதும் வரும் அமாவாசையானது யோக சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

நடராஜர்.

நித்திய சிவராத்திரி: ஆண்டின் 12 மாதங்களிலும் வரும் தேய்பிறை சதுர்த்தசி 12, வளர்பிறை சதுர்த்தசி 12 என இருபத்து நான்கு சிவராத்திரிகளும், நித்திய சிவராத்திரி எனப்படும்.

பட்ச சிவராத்திரி: தை மாதத்தில் தேய்பிறையில் வரும் பிரதமை திதியில் இருந்து 13 நாள் வரையில், நியமத்துடன் ஒரு பொழுது மட்டும் உணவு உண்டு, 14-வது நாளான சதுர்த்தசி அன்று உபவாசம் இருப்பது பட்ச சிவராத்திரியாகும்.

மாத சிவராத்திரி: மாதம் தோறும் அமாவாசைக்கு முன்தினம் வரும் சதுர்த்தசி திதியில் வருவது மாத சிவராத்திரி ஆகும். இவற்றில் ஒன்றையோ, இரண்டையோ, மூன்றையோ, நான்கையோ அல்லது ஐந்தையுமோ அவரவர் சக்திக்கு ஏற்ப கடைப்பிடித்து வரலாம். அதற்கு தக்க பலன் கிடைக்கும். ஓம் நமசிவாய…..ஓம் நமசிவாய…..ஓம் நமசிவாய…..