சிவராத்திரியில் ‘லிங்கோற்பவ’ வழிபாடு!

Read Time:6 Minute, 50 Second

அடிமுடி காணமுடியாமல் நின்ற திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் லிங்கோற்பவ மூர்த்தியாக சிவன் காட்சி தந்த தினமும் சிவராத்திரி என கருதப்படுகிறது.

ஒருமுறை, மகாவிஷ்ணுவுக்கும் பிரம்மனுக்கும் இடையே, ‘யார் பெரியவர்’ என்று வாக்குவாதம் தொடங்கி சண்டையாகவே உருமாறியது. அந்த மோதலின் போது, இருவருக்கும் இடையே ஒளி பொருந்திய பெரியதொரு நெருப்புத் தூணாக நின்றார் சிவபெருமான். அந்தத் தூணின் பிரகாசத்தைக் கண்ட இருவரும் பிரமித்தனர்.

அப்போது திருமால், பிரம்மனை நோக்கி, “நமக்கு இடையில் அதிமகிமை பொருந்திய மூன்றாவது ஒருவரும் இருக்கிறார். அவராலேயே இது உண்டாக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், இதன் அடியையும் முடியையும் முதலில் அறிவோம்’’ என்றார். பிரம்மனும் ஒப்புக்கொண்டார். உடனே, திருமால் வலிய கொம்புகளுடைய வராஹ அவதாரம் எடுத்து, பூமியை அகழ்ந்து சென்று அதன் மூலத்தைக் காண முயன்றார். பிரம்மன் அன்னத்தின் வடிவம் எடுத்து முடியைத் காணச் சென்றார்.

ஆண்டுகள் பலவாயின; அவர்களால் எதையும் காணமுடியவில்லை. அவர்களின் உடலும் உள்ளமும் சோர்ந்துபோயின. ஆகவே, இருவரும் தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு பழையபடி பூமியை அடைந்தனர். உடன் இருவரும் ஒன்றாக அங்கே ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்தனர்.

அதைத் தொடர்ந்து, அந்த நெருப்புத் தூணின் மையத்தில் மான், மழு, அபய, வரத முத்திரைகளைத் தாங்கியவராகத் தோன்றினார் சிவபெருமான் இருவரிடத்திலும், நான்முகன் என் வலதுபுறத்திலும், திருமால் என் இடதுபுறத்திலும் தோன்றியவர்கள் எவனே எனக்கு இருவரும் ஒன்றே என்றுக்கூறி மகாவிஷ்ணுவையும், பிரம்மனையும் நோக்கி, ‘‘வேண்டிய வரங்களைக் கேளுங்கள்” என்றார். அவர்கள் இருவரும் அவரை வணங்கித் தொழுததுடன், தங்களின் படைத்துக் காக்கும் தொழில் ஞானம் பழையபடியே பொலிவுடன் திகழ அருளும்படி வேண்டினர்.

அப்படியே அருள்பாலித்த சிவனார், அன்பர்களே! இன்று நான் உங்கள் முன்னே தோன்றி அருள்பாலித்த நாள் சிவராத்திரியாகும். இதுபோல் முன்னம் ஒரு சிவராத்திரி நாளில் தேவியும் என்னை அர்ச்சித்துப் பேறுபெற்றாள். இந்நாளில் ஆகமங்களில் கூறியுள்ளபடி பூசை செய்தால் நினைத்த நல்லவை யாவும் நடக்கும்.” என்று அருள் புரிந்து மறைந்தார். வானுக்கும் பூமிக்குமாக நின்ற ஜோதி வடிவம் சிறிது சிறிதாக குறைந்து மலையாக மாறியது. அதுவே திருவண்ணாமலையாகும். அவர்கள் இருவரும் வணங்கிய சிவலிங்கமே லிங்கோர்பவர் ஆகும்.

இக்கதையை புராண நூல்கள் விரிவாக விளக்குகிறது. இக்கதையையொட்டியே, பிரம்மனுக்காக தாழம்பூ பொய்யுரைத்து சாபம் பெற்ற கதையும் கூறப்படுவது உண்டு. பின்னர், தாழம்பூ தனது தவறை உணர்ந்து சிவனாரிடம் விமோசனம் கேட்க, `சிவராத்திரி அன்று மட்டும் தமக்கான பூஜையில் தாழம்பூ இடம்பெறும்’ சென்று சிவனார் அருள்புரிந்ததாகவும் ஒரு திருக்கதை உண்டு.

லிங்கோற்பவ மூர்த்தி

திருவாதிரை தினத்தில் நடராஜப் பெருமானையும், உமா மகேசுவர விரத காலத்தில் உமாமகேசுவரரையும், திரிசூலவிரதத்தின்போது அஸ்திர தேவரையும் வழிபடுவது போன்று, சிவராத்திரி தினத்தில் லிங்கோற்பவ மூர்த்தியை வழிபடவேண்டும். சிவராத்திரி புண்ணிய தினத்தில் நான்குகால பூஜைகள் நிகழும். இதில் 3-வது காலம் லிங்கோற்பவ காலம். சிவனாரின் திருவடிவங்களில் ஒன்றான லிங்கோற்பவ மூர்த்தி வடிவத்துக்குக் காரணமாக, அயனும் அரியும் அடிமுடி தேடிய திருக்கதையைச் சொல்வார்கள். சிவராத்திரியில் லிங்கோற்பவ காலத்தில்தான், சிவபெருமான் நெருப்புத்தூண் நடுவில் இருந்து மான், மழு, அபய வரத முத்திரைகளுடன் தோன்றி அருள்பாலித்தார். லிங்கம் என்ற சொல்லுக்கு உருவம் என்பது பொருள். அங்ஙனம் உருவம் தாங்கி சிவனார் வெளிப்பட்டு அருள்பாலித்ததால், இது லிங்கோற்பவ காலம் எனப்படுகிறது. லிங்கத்தின் கீழ்ப்பகுதியில் பன்றி வடிவில் திருமாலும், உச்சியில் அன்ன வடிவில் (அல்லது அன்னத்தின் மீது அமர்ந்தவாறு) பிரம்ம தேவனும் பெருமானின் அடிமுடிதேடும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளனர். சிவாலயத்தில் இவருக்கான இடம் கருவறையின் பின்புறம் அமையும் மாடமாகும். ஆலயத்தின் மற்ற இடங்களில் லிங்கோற்பவ மூர்த்தியை வைக்கும் வழக்கம் இல்லை

ஆகமங்களில் சொல்லப்பட்ட வகையில் லிங்கோற்பவரை, பல்லவர்கள் கண்ட காஞ்சிக் கலைக்கோயில்கள் அனைத்திலும், லிங்கோற்பவ மூர்த்தம் திருவண்ணாமலைத் தலத்தோடு தொடர்பு உடையதால் திருவண்ணாமலையிலும் காணலாம்.

பிள்ளையார்பட்டியில் உள்ள லிங்கோற்பவர், இரண்டு கரங்களுடன் காட்டப்பட்டிருக்கிறார். பொதுவாக லிங்கோற்பவ மூர்த்தியில் உள்ள சிவபெருமானை நான்கு கரங்களுடன் அவற்றில் மான், மழு, அபய, ஊரு முத்திரைகள் கொண்டவராகவே அமைப்பது வழக்கம். ஆனால் காஞ்சிபுரம் கயிலாசநாத கோயிலில் எட்டு கரங்களுடன் கூடிய லிங்கோத்பவரைக் காண்கிறோம். இவ்வடிவமும் வேறெங்கும் இல்லாததாகும். சிவராத்திரியின் மூன்றாம் காலத்தில் இந்த மூர்த்திக்கு நெய்பூசி, வெந்நீரால் அபிஷேகம் செய்து, கம்பளித் துணிகள் அணிவித்து தாழைமடல்களால் அலங்கரித்து, எள்ளன்னம் நிவேதிக்க வேண்டும் என்பர்.