சிசிடிவி கேமரா பொருத்த சேமிப்பு பணத்தில் ரூ.1½ லட்சம் வழங்கிய சிறுமி போலீஸ் கமிஷனர் பாராட்டு

Read Time:2 Minute, 40 Second

சென்னையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த சேமிப்பு பணத்தில் ரூ.1½ லட்சம் வழங்கிய சிறுமியை போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.

சென்னையில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் நகர் முழுவதும் காவல்துறை, தனியார் பங்களிப்புடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. குற்றவாளிகள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு அஞ்சும் வகையில் சிசிடிவி கேமராக்கள் சென்னை முழுதும் பொருத்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களும் பயமின்றி நிம்மதியாக செல்ல முடிகிறது. பொதுமக்களிடையே இத்திட்டத்திற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.சென்னையை சேர்ந்த 9 வயது சிறுமி தன்னுடைய சேமிப்பு பணத்தில் இருந்து  ரூ.1½ லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு வழங்கி உள்ளார். அதனால் அச்சிறுமியை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் பாராட்டியுள்ளார்.

சென்னை காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த சத்யநாராயணா என்பவரின் மகள் ஸ்ரீஹிதா (வயது 9). 3-ம் வகுப்பு படித்து வரும் ஸ்ரீஹிதா கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராயப்பேட்டையில் உள்ள தனது தந்தை அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அங்கு போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டிருந்தனர். இதுகுறித்து சிறுமி ஸ்ரீஹிதா, தனது தந்தையிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர், கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார், பல குற்றவாளிகளை கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிறுமி ஸ்ரீஹிதா தனது சேமிப்பு பணத்தில் ரூ.1½ லட்சத்தை கேமராக்கள் பொருத்துவதற்கு வழங்கலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார். அதன்படி ஸ்ரீஹிதா தனது தந்தை சத்யநாராயணாவுடன் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து ரூ.1½ லட்சத்தை வழங்கினார். இதனையடுத்து சிறுமி ஸ்ரீஹிதாவை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் வரவழைத்து பாராட்டினார் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியை பலரும் பாராட்டி வருகின்றனர்.