19 வருடங்களுக்கு பின்னர் தென்காசி வழியாக சென்னை -கொல்லம் இடையே புதிய தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில்…!

Read Time:5 Minute, 26 Second

செங்கோட்டை, தென்காசி வழியாக சென்னை -கொல்லம் இடையே புதிய தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு கூடுதல் ரெயில் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ரெயில் பயணிகள் மத்தியில் நீண்டகாலமாக இருக்கிறது. செங்கோட்டை -புனலூர் அகல ரெயில் பாதை பணிகள் முடிவடைந்த பிறகு, அந்த பாதையில் தாம்பரம் -கொல்லம் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இப்போது சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்துக்கு புதிய தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

இதற்கான தொடக்க விழா சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. சென்னை -கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16101) தினமும் சென்னை எழும்பூரில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படுகிறது. தென்காசிக்கு மறுநாள் காலை 4.13 மணிக்கும், செங்கோட்டைக்கு காலை 5.10 மணிக்கும் வந்து, கொல்லத்தை காலை 8.45 மணிக்கு சென்றடைகிறது. இதுவே கொல்லத்தில் இருந்து இந்த ரெயில் (வண்டி எண் 16102) காலை 11.45 மணிக்கு புறப்படுகிறது. செங்கோட்டைக்கு மாலை 3.10 மணிக்கும், தென்காசிக்கு 3.28 மணிக்கும் வந்து செல்கிறது.

இந்த ரெயில் சென்னை எழும்பூரை மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரெயிலில் மூன்றடுக்கு ஏ.சி. வசதி பெட்டிகள் 2, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் 8, 2 பொது பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும் என ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ரெயில் சேவை மாலை மத்திய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் தொடங்கி வைக்கிறார். குற்றாலம் மற்றும் சபரிமலை சீசன் நேரங்களில் இவ்வழியாக கூடுதல் ரெயில் இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. குற்றாலம் மற்றும் சபரிமலைக்கு செல்லும் தமிழகத்தை சேர்ந்த பக்தர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். நெல்லை மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகையும் அதிகரிக்கும் என பார்க்கப்படுகிறது.

19 ஆண்டுகளுக்கு பின்னர்

தென்காசி வழியாக சென்னை -கொல்லம் இடையே தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் 2000-ம் ஆண்டு அகல ரெயில் பாதை பணி காரணமாக நிறுத்தப்பட்டது. இப்போது 19 ஆண்டுகளுக்கு பின்னர் தொடங்கப்படுகிறது. சென்னை-கொல்லம் ரெயில் சேவை மிகவும் பழமையான ரெயில் சேவையாகும். 2018-ம் ஆண்டு செங்கோட்டை -புனலூர் அகல ரெயில் பாதையில் சேவை தொடங்கப்பட்ட பின்னர் மீண்டும் ரெயில் சேவை தொடங்கியுள்ளது பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை – கொல்லம் இடையிலான ரெயில் சேவையை 1904-ம் ஆண்டு திருவிதாங்கூர் மன்னர் திருநால் ராம வர்மாவால் தொடங்கப்பட்டது. பின்னர் 1918-ம் ஆண்டு ரெயில் சேவை திருவனந்தபுரம் வரையில் நீட்டிக்கப்பட்டது. ஏசி வசதி கொண்ட பழமையான மீட்டர்கேஜ் ரெயில் இதுவாகும்.

சென்னை – திருவனந்தபுரம் இடையிலான ரெயில் கோவை, கோட்டயம் மற்றும் செங்கானூர் வழியே இயக்கப்படும் போது மொத்தம் தொலைவு 922 கிலோ மீட்டர் ஆகும். பயண நேரம் 16 மணி நேரம் 10 நிமிடங்கள் ஆகும்.

சென்னை – திருவனந்தபுரம் இடையே ரெயில் நாகர்கோவில் வழியாக இயக்கப்படும் போது தொலைவு 795 கிலோ மீட்டர் ஆகும்.

சென்னையில் இருந்து கொல்லம் வழியாக திருவனந்தபுரம் செல்லும் போது தொலைவு 825 கிலோ மீட்டர் ஆகும். மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் செல்லும் ரெயில் தடத்திற்கு மாற்றாக இத்தடம் பணியாற்றும் எனவும் ரெயில் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே தாம்பரத்தில் இருந்து நெல்லை வரை தினமும் இயக்கப்பட்டு வருகிற அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.16191) நாகர்கோவில் வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து தினமும் இரவு 11 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 1 மணிக்கு நெல்லை சென்றடைகிறது. இதேபோல மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து தினமும் மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு (எண்.16192), மறுநாள் காலை 9.45 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. புதிய கால அட்டவணை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.