எப்-16 விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்திய ஆதாரம் முக்கியமானது ஏன்?

Read Time:6 Minute, 52 Second

இந்தியாவில் ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்த பாகிஸ்தான் விமானப்படை முயற்சி செய்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி 28-ம் தேதி இந்திய முப்படை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, பாகிஸ்தானின் எப் 16 விமானங்களால் ஏவப்பட்ட ஏவுகணையின் சிதைவு பாகங்களை ஆதாரமாக காட்டினர். பாகிஸ்தானின் ஏவுகணையான அம்ராம் இந்திய அதிகாரிகளால் காட்டப்பட்டது. இந்த ஏவுகணை பாகிஸ்தானின் எப்16 ரக போர் விமானத்தில் பயன்படுத்தக்கூடியது.

பாகிஸ்தானின் எப் 16 விமானம்.

காஷ்மீரின் கிழக்கு ராஜோரியில் பாகிஸ்தான் விமானப்படை ஏவுகணையை ஏவியுள்ளது. எப்-16 விமானங்களை பயன்படுத்தவில்லை என பாகிஸ்தான் மறுக்கும் நிலையில், அதனை பயன்படுத்தியதற்கான ஆவணங்களை இந்தியா காண்பித்துள்ளது. எப் 16 விமானத்தை இந்தியாவின் மிக்-21 விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளது. இதனுடைய சிதைவு பாகம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என செய்தி வெளியாகியுள்ளது.

இது ஏன் முக்கியமானது?


* பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமே எப். 16 போர் விமானங்களை பயன்படுத்த முடியும். இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்துவதற்கு அமெரிக்கா தடை செய்திருக்கிறது. ஆனால் இந்திய ராணுவ நிலையை குறிவைத்து தாக்குதல் நடத்த எப்-16 விமானத்தை பயன்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் தடையையும் மீறி பாகிஸ்தான் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.


* 1971-ம் ஆண்டு வங்காளதேச விடுதலைப் போருக்கு பின்னர் இந்தியா-பாகிஸ்தான் விமானப்படைகள் வானில் மோதலில் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தானிய விமானப்படையில் உள்ள எப்.16 விமானங்கள் இப்போதைய நவீனத்திற்கு ரேடார்கள், நேவிகேஷன் கொண்டது. ஆனால் இந்திய விமானப்படையில் உள்ள ரஷ்யால் தயாரிக்கப்பு மிக் 21 விமானம் எப்.16 விமானத்தை தாக்கி அழித்துள்ளது என்பது சாதனையாகும். எப்16 விமானம் நான்காம் தலைமுறை போர் விமானம். ஆனால் மிக்-21 இரண்டாம் தலைமுறை போர் விமானம். தற்போது, இந்தியாவால் தரம் உயர்த்தப்பட்டு ‘பிசான்’ என்று அழைக்கப்படுகிறது.

இது இந்திய விமானப்படையின் திறனையும், பாகிஸ்தானின் திறன்யின்மையையும் பிரதி பலிக்கிறது.


விசாரணை நடத்த அமெரிக்கா முடிவு

பயங்கரவாதத்திற்கு எதிராக பயன்படுத்துவதற்காக அமெரிக்கா வழங்கிய எப் 16 விமானங்களை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ள நிலையில் இதுபற்றியை விசாரணையை அமெரிக்கா தொடங்குகிறது.

எப். 16 விமானங்களை பயன்படுத்திய ஆவணங்களை இந்தியா வெளியிட்ட பின்னர் பாகிஸ்தானின் விதிமீறல் குறித்து விசாரணை நடத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான தகவல்களை திரட்டி வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கோன் பாக்னர் தெரிவித்துள்ளார். மேலும் இது உண்மை என்றால் விசாரணை செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எப்16 விமானங்களின் எலெக்ட்ரானிக் சிக்னல்கள் இந்திய விமானப்படை ரேடாரில் பதிவாகியுள்ளன. இந்த விவரங்கள் விரைவில் அமெரிக்கா வசம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது.

அம்ராம் ஏவுகணை

‘அம்ராம் ‘ என்று அழைக்கப்படும் AIM-120 சிறிய ரக ஏவுகணை அமெரிக்காவின் ரேதியோன் நிறுவனத்தால் தயாரிக்கப்படுவது. இந்த ஏவுகணையை எப் 16 ரக விமானத்தில் இருந்து மட்டுமே ஏவ முடியும். இந்த ரக ஏவுகணைகள் விமானத்தை தாக்கி அழிக்கக்கூடியவை. இந்த ஏவுகணையையும் இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தக்கூடாது என்பதுதான் ஒப்பந்தத்தின் சாராம்சம் என கூறப்படுகிறது. அமெரிக்க சட்டத்தின்படி பிற நாடுகள் மீது எப்-16 கொண்டு தாக்கினால், அந்த விமானங்களை அமெரிக்கா திரும்பப் பெற முடியும்.

பாகிஸ்தான் அம்ராம் ஏவுகணையின் சிதைவு பாகம்.

அதனால்தான் எப்-16 ரக விமானங்களைப் பயன்படுத்தவில்லை என்று பாகிஸ்தான் மறுக்கிறது. பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்குயென ஆயுதங்களை வாங்கி, அதனை பயங்கரவாதிகள் மூலமாகவே இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்துகிறது என்று பலமுறை இந்தியா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. பாகிஸ்தானுக்கு எப் 16 விமானங்களை வாங்கும் திட்டத்திற்கும் இந்தியா எதிர்ப்பை பதிவு செய்து இருந்தது. காஷ்மீரில் பயங்கரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கியது என பலமுறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது ஆதாரத்தை இந்தியா வெளியிட்டுள்ளது, பாகிஸ்தானுக்கு தலைவலியாக அமையும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்ததை அமெரிக்கா பாராட்டியுள்ளது. விமானி அபிநந்தனை வெளியிடவும் பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. ஏற்கனவே டொனால்டு டிரம்ப் நிர்வாகம் பாகிஸ்தான் பயங்கரவாதம் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என பல கோடி மதிப்பிலான ராணுவ உதவியை நிறுத்திவிட்டது. இப்போது எப் 16 விவகாரத்தில் கிடைத்துள்ள ஆதாரம் பாகிஸ்தான் மீதான பிடியை மேலும் இறுக்க உதவியாக இருக்கும்…