அபிநந்தனின் மோதிரம் வாட்ச் தவிர்த்து மற்ற உடமைகளை பாகிஸ்தான் அபகரித்துக்கொண்டது என தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானில் சிக்கிய இந்திய விமானி அபிநந்தன் வாகா-அட்டாரி எல்லை வழியாக நேற்று முன்தினம் இரவு நாடு திரும்பினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அபிநந்தனுக்கு ராணுவ விதிமுறைப்படி பல்வேறு பரிசோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. இதன்பிறகு, பாகிஸ்தானில் இருந்த போது என்ன நடந்தது என்பது குறித்து அபிநந்தனிடம் விரிவான விசாரணையை உளவுத்துறை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.
பாகிஸ்தான் ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த போது உடல்ரீதியாக துன்புறுத்தப்படவில்லை என்றாலும் தன்னை மனரீதியாக துன்புறுத்தியதாக அபிநந்தன் கூறியதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.அபிநந்தனை எல்லைக்கு அழைத்து வருவதற்கு முன்பு லாகூரில் உள்ள அந்நாட்டு உளவு அமைப்பின் (ஐஎஸ்ஐ) அலுவலகத்துக்கு அழைத்து சென்றுள்ளனர், கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே அபிநந்தனின் மோதிரம் வாட்ச் தவிர்த்து மற்ற உடமைகளை பாகிஸ்தான் அபகரித்துக்கொண்டது என தெரியவந்துள்ளது. அபிநந்தன் சென்ற விமானம் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விபத்தில் சிக்கிய போது அதிலிருந்து தப்பித்தார். அப்போது அவரிடம் துப்பாக்கி, உயிர்தப்பிப்பதற்கான உபகரணம், வரைப்படங்கள் உள்ளிட்டவை இருந்தது. வரைப்படம் உள்ளிட்ட இந்தியா ஆவணங்களை அவர் அளிக்க முயற்சி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டது தொடர்பான சான்றிதழை இந்தியா டுடே பெற்றுள்ளது.
அபிநந்தனின் வாட்ச், மோதிரம் மற்றும் கண்ணாடியை மட்டும்தான் இந்தியாவிடம் ஒப்படைத்ததாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அபிநந்தன் இந்தியாவிற்கு வந்த போது அவருடைய உடமைகள் அடங்கிய பெட்டி எதுவும் கொண்டவரவில்லை. அவரிடம் இருந்த பிற பொருட்களை பாகிஸ்தான் அபகரித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.