பா.ஜனதா கட்சியின் இணையதளம் ஹேக்கிங்… பிரதமர் மோடியை கேலி செய்யும் மீம்ஸ் பதிவு…!

Read Time:1 Minute, 57 Second

பா.ஜனதா கட்சியின் இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டது என்று சமூக வலைதளங்களில் பயனாளர்கள் தகவல்களை பரப்பி வருகிறார்கள்.

பா.ஜனதா கட்சியின் இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டு பிரதமர் மோடியை கேலி செய்யும் வகையிலான மீம்ஸ் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி ஜெர்மனி சென்று இருந்த போது அந்நாட்டு அதிபர் ஏஜ்சலா மெர்கலுடன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிக் கொண்டிருக்கையில், தன்னை நோக்கி வந்த ஜெர்மனி அதிபருக்கு பிரதமர் மோடி கை நீட்டினார். ஆனால், அதனை கண்டு கொள்ளாத மெர்கெல், மோடியை இரு நாட்டின் தேசியக் கொடி வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றார். இவ்வீடியோவை வைத்து பிரதமர் மோடியை நெட்டிசன்கள் கேலி செய்வது வழக்கமாக இருந்தது. இந்த வீடியோ, பா.ஜனதாவின் இணையதளத்தில் மோசமான வாசகங்களுடன் இடம்பெற்றுள்ளது.

“சகோதர சகோதரிகளே உங்களை நான் முட்டாள் ஆக்கிவிட்டேன்,” என்று பிரதமர் மோடி கூறுவது போன்ற வாசகம் இடம்பெற்று இருந்தது. வீடியோவுக்கு கீழே போஹேமியன் ராப்சோடி வீடியோவும் இடம்பெற்று இருந்தது என தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து பா.ஜனதா இணையதளத்தின் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீர் பிராந்திய பா.ஜனதாவின் இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டு இருந்தது. கத்துவாவில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு நியாயம் கோரி இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.