திமுகவில் கூட்டணி தொகுதிப் பங்கீடு இறுதியானது… திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது

Read Time:2 Minute, 17 Second

திமுகவில் கூட்டணி தொகுதிப் பங்கீடு இறுதியானது, திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அதற்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழகத்தில் அதிமுக, திமுக தலைமையில் இரு கூட்டணிகள் அமைகிறது. திமுகவின் கூட்டணி விரைவாக முடிந்துள்ளது. இடையில் தேமுதிகவையும் கூட்டணியில் இணைக்க முயற்சி செய்தது திமுக. ஆனால் சாதகமான சூழ்நிலை நிலவாத நிலையில் கூட்டணியை இறுதி செய்துள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள், விசிக, இடதுசாரிக் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள், முஸ்லீம் லீக், ஐஜேகே, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு தலா ஒரு தொகுதி என 19 தொகுதிகளும், மதிமுகவுக்கு 1 தொகுதியும், ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளது. வைகோ ராஜ்யசபா எம்.பி.ஆக வாய்ப்ப்புள்ளது. மதிமுக ஈரோடு தொகுதியில் போட்டியிடுகிறது.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசுகையில் “கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக திமுக 20 தொகுதிகளில் போட்டியிடும். மார்ச் 7-ம் தேதியிலிருந்து கூட்டணி கட்சிகளுக்கு எந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து ஆலோசிப்போம். இரண்டு நாட்களில் தொகுதிகள் அறிவிக்கப்படும். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு யோசனை கூறியுள்ளோம். மனிதநேய மக்கள் கட்சிக்கு இந்த முறை கூட்டணியில் இடம் ஒதுக்க வாய்ப்பில்லை” என்று கூறியுள்ளார்.