மிக் 21 விமானங்கள் விவகாரம்; நம்மிடம் உள்ளதை ஏன் பயன்படுத்தக்கூடாது? விமானப்படை தளபதி கேள்வி

Read Time:5 Minute, 52 Second

மிக் 21 விமானங்கள் தொடர்பான கேள்விக்கு விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா பதிலளித்துள்ளார்.

இந்திய விமானப்படை மற்றும் பாகிஸ்தான் விமானப்படைக்கு இடையே பிப்ரவரி 27-ம் தேதி மோதல் நடந்த போது, இந்தியாவின் மிக் 21 பிசோன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்திய விமானி விமானத்தில் இருந்து தப்பித்த போது பாகிஸ்தானிடம் சிக்கிக்கொண்டார். இரண்டு நாட்களுக்கு பின்னர் இந்தியாவிற்கு திரும்பினார். இதற்கிடையே மிகவும் பழமையான மிக் 21 ரக விமானங்களை பயன்படுத்துவது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தது. இந்திய விமானப்படையில் அதிகமான மிக் ரக விமானங்கள் உள்ளது, அவை அடிக்கடி விபத்தில் சிக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

இந்த விமர்சனங்களுக்கு மத்தியில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவாவிடம், பழைய மிக் ரக விமானங்களை பயன்படுத்துவது ஏன்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சிரித்துவிட்டு பதில் கூறிய தானோவா, மிக் ரக 21 வகை விமானங்கள் பழைய விமானங்கள் கிடையாது. அவற்றை நவீனப்படுத்தி இருக்கிறோம். விமானத்தில் தரமான ராடார் வசதி செய்யப்பட்டுள்ளது. ஏவுகணை வசதிகளும் போதுமான ஆயுதங்களை சேமிக்கும் வசதிகளும் மிக் – 21 விமானத்தில் உள்ளன. வானில் ஏவுகணையை வீசும் சிறப்பு வசதியும் உள்ளது. நம்மிடம் உள்ள அனைத்து விமானங்களையும் கொண்டு போரிடுகிறோம் என கூறியுள்ளார்.

விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா.

செப்டம்பர் மாதம் ரபேல் விமானங்கள் அனைத்தும் விமானப்படையில் சேர்க்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அபிநந்தன் மீண்டும் எப்போது விமானப்படைக்கு திரும்புவார்? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், “விங் கமாண்டர் அபிநந்தனின் உடல் தகுதியுடன் இருந்தால் மட்டுமே பணியில் மீண்டும் சேர்க்கப்படுவார். அது அவரின் கையில்தான் இருக்கிறது. அவருக்கு என்ன சிகிச்சை தேவைப்படுகிறதோ, அது உரிய முறையில் அளிக்கப்படும். அவரின் உடல் தகுதி சரிபார்க்கப்பட்ட பின், அவர் போர் விமானத்தைக் கையாளுவார்” என்றார்.

சாவு எண்ணிக்கை

பாலகோட் பயங்கரவாத முகாமில் தாக்குதல் நடத்தப்பட்டதில் 200-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என பா.ஜனதா கூறுகிறது. இதுதொடர்பாக விமானப்படையின் தரப்பில் எந்தஒரு அதிகாரப்பூர்வ தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தனோவா பதில் அளிக்கையில், “பாலகோட் பயங்கரவாத முகாம்களில் எவ்வளவு பேர் இருந்தனர், எத்தனை பேர் இறந்தனர் என்று விமானப் படையால் உறுதியாகக் கணக்கிட முடியாது. அரசே அதைத் தெளிவுபடுத்தும். நாங்கள் உயிர்களின் இறப்பை கணக்கிடவில்லை. எங்களுக்கு வழங்கப்பட்ட பணியை, துல்லியாக தாக்குதல் நடத்தி அழித்தோமோ? இல்லையா? என்றுதான் பார்த்தோம். எதிரிகளின் இலக்கைத் துல்லியமாக தாக்கியதால்தான், அவர்கள் மீண்டும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

காடுகளில் நாம் குண்டுகளைப் போட்டிருந்தால், ஏன் பாகிஸ்தான் பிரதமர் இதுகுறித்துப் பேசப் போகிறார்? என கேள்வியை எழுப்பியுள்ளார். எல்லையில் இப்போது உள்ள நிலை தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பி.எஸ். தனோவா பேசுகையில், “இது எல்லையில் நடந்துக்கொண்டிருக்கும் ஆப்ரேஷன், அதுதொடர்பாக என்னால் எதுவும் பேசமுடியாது,”என்றார்.

பாகிஸ்தானுக்கு எப் 16 விமானங்களை வழங்கிய அமெரிக்கா, பயங்கரவாதத்திற்கு எதிராகத்தான் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, “இந்திய பகுதிக்குள் அம்ராம் ஏவுகணையின் பாகங்களை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம், பாகிஸ்தான் எப் 16 விமானம் ஒன்றை இழந்துள்ளது என்றுதான் நான் நினைக்கிறேன். அவர்கள் வெளிப்படையாகவே எப் 16 விமானங்களை நமக்கு எதிராக பயன்படுத்தியுள்ளனர். அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இப்போதையை ஒப்பந்தம் தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. அப்படியொறு ஒப்பந்தம் இருந்தால், பாகிஸ்தான் தவறான நோக்கத்திற்காக அந்த விமானங்களை பயன்படுத்தியுள்ளது என்றுதான் பொருள், அவர்கள் விதிமீறியுள்ளனர்,” என பதில் அளித்துள்ளார்.

பாகிஸ்தான் தாக்குதலின் ஆதாரமாக உள்ள அம்ராம் ஏவுகணை எப் 16 விமானங்களில்தான் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.