ரிக்கி பாண்டிங்கின் சாதனையை உடைத்தார் விராட்கோலி…! இந்திய அணி அபார வெற்றி

Read Time:2 Minute, 57 Second

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை தனதாக்கியது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. ஐதராபாத்தில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா இந்தியாவை பேட்டிங் செய்யக்கோரியது.

இதனையடுத்து பேட்டிங் செய்து விளையாடிய இந்தியா 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து மொத்தம் 250 ரன்கள் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு 251 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய் விளையாடியது. ஆஸ்திரேலிய அணியில் முதல் வரிசையில் இறங்கிய வீரர்கள் நெருக்கடி கொடுக்கும் வகையில் விளையாடினர். ஆனால் இந்திய அணி பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் கொடுத்த நெருக்கடியில் பணிந்தது. ஆஸ்திரேலிய வீரர் ஸ்டோனிஸ் அபாரம் காட்ட முயற்சித்தார். அவரை இந்திய பந்துவீச்சாளர் சங்கர் வெளியேற்றினார்.

இதனையடுத்து களமிறங்கிய வீரர்களால் இந்திய பந்துவீச்சை எதிர்க்கொள்ள முடியவில்லை. இறுதியில் ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களுக்கு 242 ரன்களை எடுத்தது. இதனால் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது. தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

விராட் கோலி 40-வது சதம்

இப்போட்டியில் 40-வது ஒருநாள் சதம் எடுத்த விராட் கோலி, கேப்டனாக விரைவில் 9,000 ரன்கள் என்ற சாதனையும் தனதாக்கினார். 120 பந்துகளை எதிர்க்கொண்ட விராட் கோலி 10 பவுண்டரிகளுடன் 116 ரன்கள் எடுத்தார். கேப்டனாக சர்வதேச கிரிக்கெட்டில் 9,000 ரன்களை குவித்து ஆஸ்திரேலிய லெஜண்ட் ரிக்கி பாண்டிங்கின் சாதனையையும் உடைத்தார். இப்போட்டியில் 22 ரன்கள் எடுத்திருந்த போது இந்த மைல்கல்லை விராட் கோலி எட்டினார்.