இந்தியாவை போன்று நாங்களும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்… பாகிஸ்தானுக்கு ஈரான் எச்சரிக்கை

Read Time:2 Minute, 41 Second

பயங்கரவாத அமைப்புகள் மீது அதிரடி நடவடிக்கை எடுப்போம் என பாகிஸ்தானுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தானில் அல்-கொய்தா, ஐ.எஸ்., தலிபான், லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது என பல்வேறு பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத இயக்கங்கள் ஆப்கானிஸ்தான், இந்தியா, ஈரானில் தாக்குதல் நடத்துகிறது. ஆப்கான், இந்தியாவில் தாக்குதலை நடத்தும் பயங்கரவாதிகள் ஈரானிலும் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர். கடந்த மாதம் 13-ம் தேதி ஈரான் பாதுகாப்புபடை வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 27 வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புதான் காரணம் என ஈரான் குற்றம் சாட்டியது.

இந்நிலையில் காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை போர் விமானங்கள் பாகிஸ்தானுக்கு சென்று ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் நிலைகள் மீது குண்டுகளை வீசி தக்குதல் நடத்தியது. இதனையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. பயங்கரவாதம் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நடவடிக்கை தொடரும் என இந்தியா எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில், இந்தியாவை போன்று தாங்களும், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்புகள் மீது அதிரடியான நடவடிக்கை எடுக்கப்போவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கையை விடுத்துள்ளார். அவர் பேசுகையில் ‘‘நீங்கள் (பாகிஸ்தான்) எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறீர்கள்? உங்களது அண்டை நாடுகள் அனைத்திலும் அமைதியற்ற சூழலை உருவாக்கி உள்ளீர்கள். எந்த அண்டை நாட்டையாவது விட்டு வைத்திருக்கிறீர்களா? பிற நாடுகளை தாக்கும் வகையில் சக்திவாய்ந்த அணுகுண்டுகளை வைத்திருக்கும் நீங்கள், உங்கள் மண்ணில் இருக்கும் சில நூறு பயங்கரவாதிகளை அழிப்பது கடினமா?,” என கேள்வியை எழுப்பியுள்ளார்.