ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட சென்னை மாநில கல்லூரியில் மர்மமான சுரங்கம்…!

Read Time:2 Minute, 58 Second

ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட சென்னை மாநில கல்லூரியில் மர்மமான சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பழமையான சென்னை மாநில கல்லூரி ஆங்கிலேயர்கள் ஆட்சியின் போது 1860-களில் கட்டப்பட்டது. தொல்லியல் துறை அதிகாரிகள் கல்லூரியின் கட்டுமானப் பணிகள் 1867-ம் ஆண்டில் தொடங்கி 1870-ம் ஆண்டில் முடிந்ததாக கூறுகிறார்கள். இப்போது இக்கல்லூரியில் இதுவரை கண்டறியப்படாத சுரங்கப் பாதை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுரங்கம் மரச்சட்டங்களால் மறைந்து இருந்துள்ளது.

கல்லூரி முதல்வர் ஆர் ராவணன், கல்லூரியில் சுரங்கப்பாதை தொடர்பாக தமிழ் வளர்ச்சித்துறை, தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு கடிதம் எழுதினார். மாநில தொல்லியல் துறை இதுதொடர்பாக ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்படி, தொல்லியல்துறை அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வை மேற்கொண்டனர்.

தொல்லியல்துறை அதிகாரி சிவநந்தன் பேசுகையில், “கட்டமைப்பு தொடர்பாக நாங்கள் முதல்கட்ட ஆய்வை மேற்கொண்டோம். வெளியில் இருந்து அடித்தளத்தை பார்த்துவிட்டு எதுவும் சொல்வது கடினம் ஆகும். தடைகளை அகற்றிவிட்டு உள்ளே செல்லும் போதுதான் சரியான யோசனை எங்களுக்கு கிடைக்கும்” என கூறியுள்ளார். கல்லூரியின் அடிதளத்தின் நுழைவு வாயில் கடந்த 50 ஆண்டுகளாக மூடப்பட்டுவிட்டது. அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக ஆவணங்கள் எதுவும் கிடையாது. அடித்தளம் குறித்து சரியான ஆய்வை மேற்கொள்ளப்பட்டால் வரலாற்றின் சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கலாம், ஒரு அருங்காட்சியகமாக மாற்றலாம் என்று ராவணன் கூறியுள்ளார்.

1964-ம் கல்லூரியில் என்.சி.சி. ஆசிரியராக இருந்த 85 வயதாகும் எஸ்.என். நப்போலி பேசுகையில், சுரங்கத்தின் வழியாக மின் இணைப்பு செய்யப்பட்டிருந்தது. ஒருபகுதியில் என்.சி.சி. துப்பாக்கிகளை வைத்திருந்ததோம். ஆனால் உள்ளே நாங்கள் செல்லவில்லை என நினைவுகூறுகிறார்.“சுரங்கத்தில் ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் வெடிமருந்துகளை இங்கே சேமித்து வைத்திருக்கலாம், இந்த சுரங்கப்பாதை செயின்ட் ஜார்ஜ் கோட்டையை நோக்கி சென்றது என்று கதைகளும் உள்ளது” என குறிப்பிடுகிறார் ஆர். ராவணன்.