பேஸ்புக் போராளிகளே, போரை விரும்பினால் படையில் சேருங்கள்…

Read Time:3 Minute, 21 Second

பேஸ்புக் போராளிகளே, போரை விரும்பினால் படையில் சேருங்கள் என உயிரிழந்த வீரரின் மனைவி கூறியுள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான நிலை ஏற்பட்ட போது ஜம்மு காஷ்மீரில் படைகளின் நகர்வு காணப்பட்டது. அப்போது ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள் சிக்கி 6 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கிடையே போரிட வேண்டும், பாகிஸ்தானுக்கு பதிலடி கடுமையாக இருக்க வேண்டும் என்றும் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இப்படி கோபத்தை வெளிப்படுத்தியவர்களுக்கான  பதிலை உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவி கொடுத்துள்ளார்.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த கர்நாடக வீரர் நினட் மண்டவ்கான் உடல் அரசு மரியாதையுடன் கடந்த வெள்ளிக்கிழமை 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. அப்போது வீரவணக்கம் செலுத்த வந்த பொதுமக்கள் ‘பாரத் மாதா கீ ஜே’ எனவும் ‘வந்தே மாதரம்’ எனவும் கோஷங்களை எழுப்பினர். அப்போது நினட் மண்டவ்கானின் மனைவி விஜேதா பேசுகையில், மக்கள் உண்மையாகவே நாட்டுக்கு சேவையாற்ற விரும்பினால் சமூக ஊடகங்களில் வார்த்தை போர் தொடுப்பதற்கு பதிலாக, ஆயுதப்படைகளில் சேர வேண்டும் என்றார்.

“நாங்கள் போரை விரும்பவில்லை. போரின் சேதத்தை நீங்கள் அறியவில்லை. என்னுடைய கணவருடைய நிலை யாருக்கும் வேண்டாம். சமூக ஊடக போராளிகளே உங்களுடைய போரை நிறுத்துங்கள். உண்மையில் நீங்கள் யுத்தத்தை விரும்பினால், முன்செல்லுங்கள்,” என விஜிதா கூறியுள்ளார்.

“சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சிலும் நிறைய விஷயங்கள் நடக்கிறது. ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயல்படுகின்றன, சில நேரங்களில் அவ்வாறு இல்லை. நீங்கள் கோஷங்களை எழுப்புகிறீர்கள். மாற்றத்தை கொண்டுவருவதற்கு உண்மையிலேயே நீங்கள் விரும்பினால், என்னுடைய நினட், அபிநந்தன் மற்றும் போர் தியாகிகளுக்காக, ஒரு சிறிய நற்காரியத்தை செய்யுங்கள். நீங்கள் இந்தியப் படையில் சேருங்கள், அல்லது உங்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களை ராணுவத்தில் சேர செய்யுங்கள். உங்களால் அதனை செய்ய முடியவில்லை என்றால் உங்களை சுற்றி இருப்பதில் மாற்றம் செய்யுங்கள் தேசத்திற்கு சேவை செய்யுங்கள். உங்கள் சுற்றுசூழல்களை சுத்தமாக வைத்திருக்க உதவி செய்யுங்கள். சாலையில் குப்பையை போடாதீர்கள், பொது இடங்களில் சிறுநீர் கழிக்காதீர்கள், பெண்களுக்கு தொந்தரவு கொடுக்காதீர்கள்,” என விஜிதா பேசியதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.