எங்களையும், காட்டையும் புரிந்துக்கொள்ளவில்லை… வெளியேற்றத்தை எதிர்க்கொள்ளும் பழங்குடி மக்கள் கவலை

Read Time:9 Minute, 23 Second

“அவர்கள் எங்களிடம் விண்ணப்பங்கள், கையெழுத்துக்கள், வரைப்படங்கள், ஆவணங்களை கேட்டார்கள் மற்றும் எங்களை மதிப்பிட அவர்கள் கார்களில் வந்தார்கள். அவர்கள் காகிதத்தில் எழுத தொடங்குவதற்கு முன்னே நாங்கள் இங்கு வாழ்ந்து வருகிறோம், நாங்கள் இங்கு காணும் முதல் கார் இதுவாகத்தான் இருக்கும். இந்த காடுதான் எங்களுடைய வீடாகும்,” என்கிறார் சத்தீஷ்கார் மாநில பழங்குடியினரான திகாம் நாக்வான்சி.

மாநில அரசுகளால் பட்டா உள்ளிட்ட நில உரிமை மறுக்கப்பட்ட பிறகும், சட்ட விரோதமாக காடுகளில் வசித்து வரும் பழங்குடியினர் மற்றும் பாரம்பரிய காட்டுவாசிகளை வெளியேற்றுமாறு உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 13–ந்தேதி உத்தரவிட்டது. பின்னர் பல்வேறு இடங்களில் எதிர்ப்பு எழுந்ததும் மத்திய அரசு மேல் முறையீடு செய்தது. இதனையடுத்து பட்டாயின்றி காடுகளில் வசிக்கும் பழங்குடியினரை வெளியேற்ற தடையென ஏற்கனவே பிறப்பித்த உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை ஜூன் 10 வரையில் விதித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவால் நாடு முழுவதும் சுமார் 11.80 லட்சம் பேர் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டது. இப்போது வெளியேற்றத்தை எதிர்க்கொண்டுள்ள பழங்குடியின மக்கள் பெரும் கவலை மற்றும் கோபம் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சியின்போது கடந்த 2006-ம் ஆண்டு பழங்குடி மக்களின் நலனுக்காகவும், அவர்களது உரிமைக்காகவும் வன உரிமைகள் சட்டம் கொண்டுவரப்பட்டது. 2005 டிசம்பருக்கு முன்னர் குறைந்தபட்சம் மூன்று தலைமுறைகள் வனப்பகுதியில் வாழ்ந்திருந்தால் காட்டுப்பகுதியில் வாழும் பழங்குடி மற்றும் காட்டுவாசி மக்கள் நில உரிமைக்கான பட்டா பெற சட்டம் அனுமதிக்கின்றது.

பாரம்பரியமாக வனப்பகுதிகளில் வாழ்ந்துவரும் பழங்குடியினர் யார் என்பதை சட்டப்பூர்வமாக விண்ணப்பித்து அவர்கள் தங்களை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று இந்தச் சட்டம் கூறுகிறது. இதில்தான் பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது.

இதுபோன்று வெளியேற்றத்தை எதிர்க்கொண்டுள்ள சத்தீஷ்காரின் தம்தரி மாவட்டத்தில் உள்ள சீதாநதி வனவிலங்கு சரணாலயத்தில் அடர்காடுகளில் வாழும் மக்களுக்கு இன்னும் கவலை இருக்கிறது. அரசாங்க அதிகாரிகளின் நடவடிக்கைகள் அவர்களை வெளியேற்றுவதற்கான விளிம்பிற்கு கொண்டு வந்துள்ளது அவர்களுக்கு கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சரணாலயம் பகுதியில் உள்ள 17 கிராமங்களில் ஒரு கிராமம்தான் குருபாதா.

இக்கிராமத்தின் தலைவர் நாக்வான்சி பேசுகையில், “இங்குள்ள ஒவ்வொரு குடும்பமும் வன உரிமை சட்டத்தின் கீழ் தனிப்பட்ட உரிமைகளுக்கு விண்ணப்பித்துள்ளோம் மற்றும் நாங்கள் அனைவரும் பல தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வருகிறோம். ஆனால் 20 சதவீதத்தினர் மட்டுமே பட்டா பெற்றுள்ளனர். எங்களுக்கு பட்டா வழங்கினால் தான் நாங்கள் இங்கே இருக்க முடியும் என்பதால் அரசாங்க அதிகாரிகள் எங்களுக்கு நிலம் கொடுக்க விரும்பவில்லை” என்கிறார்.

கடந்த 2009-ம் ஆண்டு முதல் பட்டாவிற்காக விண்ணப்பித்து வரும் நாக்வான்சி மேலும் பேசுகையில் “நாங்கள் பட்டாவிற்கான விண்ணப்பத்தை நிரப்புவோம், வருவாய் அதிகாரிகள் மற்றும் வன அதிகாரிகள் எங்களுடைய நிலத்திற்கு வருவார்கள், ஆனால் அவர்களுடைய ஆவணங்களில் இது எங்களுடைய நிலம் என கூறவில்லை என்று திரும்பி சென்றுவிடுவார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக கிராம மக்கள் சட்டத்தின் கீழ் உரிமைகளுக்கு விண்ணப்பிக்கிறார்கள். அதிகாரிகள் இப்பகுதி சரணாலயத்தின் மைய பகுதியில் வந்துவிட்டதாக கூறுகின்றனர். ஆனால், இது ஒரு சரணாலயம் என்று அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே பல தலைமுறைகளாக நாங்கள் இங்கு வாழ்ந்து வருகிறோம்,” என்று விளக்குகிறார்.

சத்தீஷ்கார் மாநிலத்தில் 1974-ம் ஆண்டு சீதாநதி வனவிலங்கு சரணாலயம் உருவாக்கப்பட்டது.1983-ம் ஆண்டு உதந்தி வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்பட்டது. இரண்டும் 2009-ல் ஒரு புலி சரணாலயம் என அறிவிக்கப்பட்டது.

“நான் இங்குதான் பிறந்தேன், என் பெற்றோரும் தாத்தா பாட்டிகளும் இருந்தார்கள்” என்கிறார் 65 வயதாகும் நாக்வான்சி.

பழங்குடியினர் பிரச்சனை தொடர்பாக வன உரிமை சட்ட ஆர்வலர் பெபினிபுரி கோஸ்வாமி பேசுகையில், பெரும்பாலான பட்டா விண்ணப்பங்கள் நிராகரிப்பு நிலத்திற்கு சென்று சோதனை செய்யும் போதுதான் நடக்கிறது. அதிகாரிகள் கிராமங்களுக்கு செல்லும் போது சாதி சான்றிதழ் கேட்கிறார்கள். ஆனால் அவர்களில் பலருக்கு அது கிடையாது. காட்டில் வாழ்கிற பெரும்பாலான மக்களுக்கு எழுதப்படிக்க தெரியாது. அதிகாரிகள் வரும்போது எங்களுடைய நிலம் 5 ஏக்கர் என பழங்குடியினர் சொன்னால், அதிகாரிகள் தங்களுடைய பதிவில் ஒரு ஏக்கர் எனவும் பதிவு செய்யலாம்.

பழங்குடியினர் கோரிக்கையை அதிகாரிகள் நிராகரிக்கலாம். ஆனால் பழங்குடியினருக்கு அவர்களது கூற்றுக்கள் அங்கீகரிக்கப்பட்டதாக தெரிகிறது. சில வருடங்களுக்கு பின்னர்தான் பழங்குடியினருக்கு அவர்களுடைய பெயர் ஆவணத்தில் இல்லையென்றும் தெரியவரும். அவர்கள் மேல்முறையீடு செய்யலாம், ஆனால் கேட்க யாரும் கிடையாது.

வனப்பகுதி.

உதாரணமாக இந்த 17 கிராமங்களில் பெரும்பாலானவர்கள் கோன்ட் சமுதாயத்திலிருந்து வந்த பழங்குடி மக்கள் ஆவர். ஆனால் சிந்துளலா பகுதியானது முக்கியமான பழங்குடியின குழுவை சேர்ந்த காமருக்களுக்கு சொந்தமானதாகும்.

சிந்துளலாவில் 62 பேரின் கோரிக்கைகள் உள்ளன, ஆனால் பெரும்பாலானவை நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் வரும்போது காமர்கள் நிலத்தை உழுது இருக்கிறார்களா? விவசாய உபகரணம் உள்ளதா? காளை வண்டி உள்ளதா? என்று பார்க்கிறார்கள். ஆனால் காமர்கள் தங்கள் கைகளால் சாகுபடி செய்பவர்கள் மற்றும் தாவரத்தை மாற்றி கொள்பவர்கள். அதிகாரிகள் அதை புரிந்து கொள்ளவில்லை மற்றும் அவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிராகரிக்கின்றனர். மேலும அவர்கள் இருப்பது காடுகள் அழிக்கப்படுவதற்கு வழிவகுப்பதாக கூறுவதால் மிகவும் கோபம் கொள்கிறார்கள் என்று கூறுகிறார்.

பழங்குடியினரான நாக்வான்சி மேலும் பேசுகையில் “இங்கு புலிகள் இருப்பதாக அவர்கள் கூறுவதன் காரணம் அவர்கள் எங்களுடை கோரிக்கைய நிராகரிக்கிறார்கள். 30 ஆண்டுகளாக இங்குதான் உள்ளோம் ஒரு முறை கூட நாங்கள் பார்த்ததில்லை. இது எங்களுடைய தவறா? நகரங்களிலிருந்து வந்தவர்கள் காட்டுக்கும் எங்களுக்குமான உறவை புரிந்து கொள்ளவில்லை. என்னுடைய பேர் நாக்வான்சி, நான் பாம்புகளை வணங்குகிறேன். நாங்கள் காடுகளை பாதுகாக்கின்றோம், அதில் வாழ்கிறோம். நாங்கள் என்ன அரசாங்கத்தைப் போல, மரங்களை வெட்டி அவற்றை விற்பதற்கு எடுத்துச் செல்கிறோமா? என கேள்வி எழுப்புகிறார்.

மாநிலத்தில் புதிய காங்கிரஸ் அரசாங்கம் யாருடைய விண்ணப்பங்கள் நிகாரிக்கப்பட்டதோ அவர்கள் மீண்டும் விண்ணப்பிப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளது என கிராமவாசிகள் ஒப்புக்கொள்கின்றனர்.எங்களை வெளியேற்ற முயன்றால் நாங்கள் சாலைக்கு வருவோம், எங்களுடைய கோரிக்கையை எழுப்பி போராடுவோம் என்கிறார்.

நன்றி – தி இந்தியன் எக்ஸ்பிரஸ்.