தேர்தல் பரபரப்பு; கனிமொழிக்கு எதிராக தமிழிசை களமிறங்குகிறாரா?

Read Time:2 Minute, 21 Second

தூத்துக்குடியில் கனிமொழிக்கு எதிராக தமிழிசை களமிறங்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

2019 தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கனிமொழி விருப்ப மனு அளித்துள்ளார். தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதியை குறிவைத்து கடந்த சில மாதங்களாகவே கனிமொழி பணியாற்றி வருகிறார். திமுகவின் மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கும் கனிமொழி நேரடியாக தேர்தலில் போட்டியிட்டது கிடையாது. கட்சிக்காக தீவிரமாக பிரசாரம் செய்தாலும் மாநிலங்களவை எம்.பி.யாகதான் பணியாற்றி வந்துள்ளார்.

முதல்முறையாக தேர்தல் களத்தில் மக்களின் வாக்கை எதிர்நோக்க உள்ளார் கனிமொழி. இதற்கிடையே பா.ஜனதா கட்சியின் தரப்பில் அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கனிமொழி போட்டியிடும் தூத்துக்குடி தொகுதியில் தமிழிசையும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் பிற பகுதிகளைவிட தூத்துக்குடியில் தேர்தல்களம் மிகவும் வேகமாக சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதிமுகவிடம் தூத்துக்குடி தொகுதியை பா.ஜனதா கேட்டுள்ளது. அதேபோல், பா.ஜ.க பலமாக இருக்கும் 5 தொகுதிகளையும் நாங்கள் கேட்டு இருக்கிறோம். இது தொடர்பாக அதிமுக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்வோம். பா.ஜனதா போட்டியிடும் அனைத்து தொகுதிகளும் விரைவில் அறிவிக்கப்படும்” என்றார். தமிழிசை சவுந்தரராஜன் களமிறங்கினாலும், ஸ்டெர்லைட் விவகாரம் வாக்காளர்களை அவருடைய கட்சியைவிட்டு விலகச்செய்யும் என்றே பார்க்கப்படுகிறது.