40-ம் நமதே… நாடும் நமதே… காஞ்சீபுரத்தில் பிரதமர் மோடி சூளுரை

Read Time:3 Minute, 21 Second

40-ம் நமதே, நாடும் நமதே என காஞ்சீபுரத்தில் பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி. மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. தே.மு.தி.க.வும் இந்த கூட்டணியுடன் இன்று இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இணையவில்லை, பேச்சுவார்த்தை இழுபறியில் முடிந்தது. வண்டலூர் அருகேயுள்ள கிளாம்பாக்கத்தில் இன்று பெரும் கூட்டத்திற்கு அதிமுக கூட்டணி கட்சிகள் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துக்கொண்டனர். இதில் பேசிய பிரதமர் மோடி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

சென்ட்ரல் ரெயில் நிலையம் இனி எம்ஜிஆர் ரெயில் நிலையமாக அழைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டார்.

பிரதமர் மோடி பேசுகையில், தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழர்கள் எங்கிருந்தாலும் பிரச்னை என்றால் முதலில் நடவடிக்கை எடுப்பது மத்தியில் உள்ள பா.ஜனதா அரசுதான். யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை நான் பெற்றுள்ளேன். தமிழகத்திற்கு வந்து செல்லும் விமானங்களில் அறிவிப்புகளை தமிழிலேயே அறிவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இந்தியாவை பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி முனையமாக்குவது எங்கள் நோக்கமாகும். தமிழகத்தில் அமையும் பாதுகாப்பு தொழில்பூங்கா தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும். எதிர்க்கட்சிகள் சுயநலத்திற்காக வலிமையான நாட்டையும், ராணுவத்தையும் விரும்பவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் முடிவுகளை மக்கள்தான் எடுக்கிறார்கள், காங்கிரசால் மாநில நலன்களை பூர்த்தி செய்யமுடியாது. ஏனென்றால் அவர்களுக்கு குடும்பமே முக்கியம். சர்வாதிகாரம் மற்றும் குடும்ப ஆட்சியை எதிர்த்ததால் காமராஜரை, காங்கிரஸ் கட்சி அவமானப்படுத்தியது.

திமுக உட்பட பல்வேறு அரசுகளை காங்கிரஸ் அரசு கலைத்தது, சந்தர்பவாத அரசியலால் திமுக, காங்கிரஸ் கட்சியுடன் இணைந்துள்ளது. எனது ஒவ்வொரு சொட்டு ரத்தமும் இந்த நாட்டு மக்களுக்காகவே, மக்களின் ஆசிர்வாதத்துடன் இன்னும் நிறைய செய்ய காத்திருக்கிறேன் என்று “நாற்பதும் நமதே, நாடும் நமதே” என தமிழில் உரையை முடித்தார். தமிழகத்தில் மொத்தம் 39 தொகுதிகள் உள்ளது, புதுச்சேரியில் ஒரு தொகுதி உள்ளது. மொத்தம் 40 தொகுதிகளாகும்.