தொகுதி பங்கீட்டை சமன்செய்ய மாநிலங்களவை சீட்டை பயன்படுத்தும் திமுக, அதிமுக…

Read Time:3 Minute, 31 Second

தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களவை எம்.பி.க்களில் 6 பேரது பதவிக்காலம் ஜூலையுடன் முடிகிறது. திமுக எம்.பி. கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி ராஜா, அதிமுகவில் மைத்ரேயன் உள்பட 4 எம்.பி.க்கள் என மொத்தம் 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிகிறது. தமிழகத்தில் 2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்கிறது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, ஜூன் மாதம் 6 மாநிலங்களவை எம்.பி.க்கான தேர்தல்கள் நடைபெறும்.

எனவே பாராளுமன்றத் தேர்தலும், சட்டமன்றத் இடைத்தேர்தலும் அதிமுக, திமுகவிற்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 2019 தேர்தலில் சிறு கட்சிகளை கூட்டணியில் சேர்க்க மிகவும் ஆர்வம் காட்டும் திமுக மற்றும் அதிமுக மாநிலங்களவை எம்.பி. பதவியை வழங்கி வருகிறது. சட்டமன்றத்தில் இப்போது உள்ள எம்.எல்.ஏ.க்கள் பலத்தின்படி இரு எம்.பி.க்களை திமுக மாநிலங்களவைக்கு தேர்வு செய்ய முடியும்.

21 சட்டமன்றத் தொகுதிகள் இடைத்தேர்தலில் திமுகவிற்கு வெற்றி கிடைத்தால் இந்த எண்ணிக்கை மூன்றாக உயரவும் வாய்ப்பு உள்ளது. திமுக இப்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவியை கொடுப்பதாக தெரிவித்துள்ளது. இதேபோன்றுதான் காங்கிரசுடன் கூட்டணி உருவாகியுள்ளது என தெரிகிறது. காங்கிரசை சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தமிழகத்தில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்படலாம் என யூகங்கள் எழுக்கிறது. இதற்கிடையே மாநிலங்களவை தேர்தல் போட்டியில் கனிமொழி விலகிவிட்டார்.

2019 தேர்தலில் நேரடியாக மக்களை சந்திக்கும் வகையில் தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். எனவே இருவரையும் திமுக தேர்வு செய்யலாம்.

அதிமுகவை சேர்ந்த 4 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிகிறது. மைத்ரேயன், மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அடுத்தவாரம் கட்சி தலைமை முடிவு செய்யலாம் என பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு ஒரு மாநிலங்களவை சீட் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை தேமுதிகவும் கேட்பதால் இழுபறி நீடிக்கிறது எனக் கூறப்படுகிறது. மேலும் ஒரு மாநிலங்களவை சீட்டை வழங்க அதிமுக தயாராக இல்லை என தெரிகிறது. 39 தொகுதிகளில் 20 தொகுதிகள் வரையில் போட்டியிட நாட்டம் காட்டும் பெரிய கட்சிகளான திமுக, அதிமுக தொகுதி பங்கீட்டை சமன்செய்ய மாநிலங்களவை சீட்டை பயன்படுத்துகிறது.