இனி ராணுவ நடவடிக்கைதான்… பாகிஸ்தானுக்கு இந்தியா இறுதி எச்சரிக்கை

Read Time:2 Minute, 50 Second

பாகிஸ்தானில் இருந்து இனி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டால் ராணுவ நடவடிக்கைதான் என பாகிஸ்தானுக்கு இந்தியா இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படைகள் பாகிஸ்தானுக்கு சென்று அங்கு செயல்பட்ட ஜெய்ஷ் பயங்கரவாத இயக்கத்தின் 3 முகாம்களை குண்டுகளை வீசி அழித்தன. இதனையடுத்து பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள் அத்துமீறியதால் இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்தது. பின்னர் சர்வதேச நாடுகள் அமைதியாக இருக்க வலியுறுத்திய நிலையில் பதற்றம் தணிந்தது.

இந்தியாவில் மீண்டும் தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பயங்கரவாதிகள் கடல் வழியாகவும் வந்து தாக்குதலை மேற்கொள்ளலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து இனி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டால் ராணுவ நடவடிக்கைதான் என பாகிஸ்தானுக்கு இந்தியா இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளது. அனைத்து வழிகளிலும் பாகிஸ்தானுக்கு பதிலடியை கொடுக்க இந்தியா தயார் நிலையில் இருக்கிறது. “பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சனை இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பிரச்சினை கிடையாது. சர்வதேச பயங்கரவாதம் தொடர்பானது.

இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையை சம்மாளிக்க பல்வேறு நாடுகளின் உதவியை பாகிஸ்தான் நாடியுள்ளது. ஆனால் எந்தவொரு நாடும் பாகிஸ்தானுக்கு உதவ முன்வரவில்லை. ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டால் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்படும். இந்தியாவில் மேலும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்தால் அனைத்து வழிகளிலும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்படும். இந்திய விமானப்படையின் மேற்குப் பிரிவு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என இந்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.