தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் என எச்சரிக்கை

Read Time:2 Minute, 25 Second

தமிழகத்தில் உள்மாவட்டங்களில் இன்றும், நாளையும் அனல் காற்று வீசும் என்றும், வெப்பம் அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் கொடுமை அதிகமாக காணப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வெயில் கடுமையாகவே அடித்து வருகிறது. இந்நிலையில் உள்மாவட்டங்களில் இன்றும், நாளையும் அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

இந்த ஆண்டு கோடைகாலமான மே, ஜூன் மாதங்களில் இயல்பைவிட 0.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து காணப்படும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக பகுதிகளுக்கு இயல்பாக கிழக்கில் இருந்து வரும் காற்று, கொஞ்சம் குளிர்ந்த தன்மையில் இருக்கும். அந்தவகையில் கிழக்கு திசை காற்று நிலப்பரப்பு பகுதிகளுக்கு வருவது குறைந்து, வடக்கு நோக்கி திசை மாறி செல்கிறது. மேலும் வடமேற்கு திசை காற்று வெப்பமான சூழலில் தமிழக பகுதிகளை நோக்கி வருகிறது.

இதனால் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் (வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை) இன்றும், நாளையும் அனல் காற்று வீசக்கூடும். அதிகபட்சமாக இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து காணப்படும். சென்னையை பொறுத்தவரையில் இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே,’தமிழ்நாடு வெதர்மேன்’ பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள தகவலில், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களில் 40 டிகிரி வெப்பம் கொளுத்தக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.