ஊடகங்களையோ, அரசியல்வாதியையோ நம்பாதீர்கள் நடிகர் சித்தார்த் டுவிட்..!

Read Time:3 Minute, 14 Second

ஊடகங்களையோ, அரசியல்வாதிகளையோ நம்பாதீர்கள் என நடிகர் சித்தார்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் பாலகோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது தொடர்பாக அரசியல் கட்சிகள் இடையே பெரும் மோதல் நிலவுகிறது. இந்திய விமானப்படை எண்ணிக்கை எதையும் தெரிவிக்கவில்லை. இந்திய வெளியுறவுத்துறையும் எண்ணிக்கையை தெரிவிக்கவில்லை, இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது, இது ராணுவ நடவடிக்கை கிடையாது என்றது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “இந்தியாவின் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (தொழில்நுட்ப ரீதியிலான தகவல்களை அளிக்கும் உளவுப்பிரிவு) பாலகோட் முகாமில், 300 மொபைல் போன்கள் உபயோகத்தில் உள்ளதாக தெரிவித்தது. இந்திய விமானப் படை, குண்டுகளை வீசும் முன்பு இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக்கொண்டுதான் பாலகோட் தாக்குதலில் ஜெய்ஷ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தினோம்,” என்றார்.

பிரதமர் மோடியை ஏற்கனவே இவ்விவகாரத்தில் விமர்சனம் செய்த நடிகர் சித்தார்த் மீண்டும் மத்திய அரசு, அரசியல் கட்சிகள், ஊடகங்களை விமர்சனம் செய்யும் வகையில் டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.


மக்கள் பாதுகாப்புப் படையை நம்புகிறார்கள், உங்களையல்ல..! மோடியை சாடிய சித்தார்த்

சித்தார்த் வெளியிட்ட டுவிட் செய்தியில், “ராணுவப்படையினர் பலி எண்ணிக்கையை கணக்கிடுவதில்லை. இந்திய ஊடகங்களும், இந்திய அரசியல்வாதிகளும்தான் இதை செய்கின்றனர். இவர்கள்தான் எண்ணிக்கை குறித்து சப்தமிடுகின்றனர். ராணுவத்தினரை நம்புங்கள். ஊடகங்களையோ, அரசியல்வாதியையோ நம்பாதீர்கள். தேசப்பற்றுடன் இருங்கள். கேள்விகள் கேளுங்கள், தெரிந்து கொள்வதற்கான தகுதி நமக்கு உண்டு. எந்த ஒரு தலைவரும் இதனை மறக்க அனுமதிக்காதீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் இடையே பதட்டமான நிலை ஏற்பட்ட போது இந்திய ஊடகங்களில் காட்சி படுத்தல் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. சில ஊடகங்கள் ‘வார் ஹவுஸ்’ என்று பெயரிட்டு பெரும் வார்த்தை போரை நடத்தியது. இதனையும் சித்தார்த் விமர்சனம் செய்துள்ளார்.