9 விவசாயிகள் தற்கொலை… கடன் வசூலிக்க வங்கிகளுக்கு கேரளா அரசு தடை

Read Time:3 Minute, 13 Second

கேரளாவில் விவசாயிகளிடம் கடன் வசூலிக்க வங்கிகளுக்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் நேரிட்ட கடும் வெள்ளத்தில் இடுக்கி, வயநாடு உள்பட 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. 56,844 ஹெக்டேர் பயிர்கள் நாசமாயின. ரூ.1,400 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டது. சுமார் 3.14 லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து விவசாயிகளிடம் ஓராண்டுக்கு கடன் வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது. காலக்கெடு முடிந்த நிலையில் வங்கிக் கடனை செலுத்துமாறு சுமார் 15,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பல்வேறு வங்கிகள் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதனையடுத்து விவசாயிகள் தற்கொலை சம்பவமும் பதிவானது. அதிகமாக பாதிக்கப்பட்ட இடுக்கி மாவட்டத்தில் மட்டும் 2 மாதங்களில் 8 விவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர் என்றும் திருச்சூரில் ஒரு விவசாயி தற்கொலை செய்துக்கொண்டார் என்றும் அரசு தரப்பு தகவல்கள் வெளியாகியது. இடுக்கி மாவட்டத்தில் முக்கிய பயிர்தொழிலான காபி பெரும் பாதிப்புக்கு உள்ளானது.

“வெள்ளத்தை அடுத்து விவசாயிகள் தங்களுடைய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கிறார்கள். அவர்களுடைய பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தில் அழிந்துவிட்டது. கடந்த சில மாதங்களாக காணப்படும் வானிலை மாற்றமும் பயிர்களை பெரிதும் சேதப்படுத்துகிறது. அரசின் உதவிகள் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடையவில்லை, தேவையான நடவடிக்கையை உடனடியக அரசு மேற்கொள்ள வேண்டும்,” என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகளின் பிரச்சினை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, விவசாயிகளிடம் வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை கடன் தொகை வசூலிக்கக்கூடாது. வேளாண் கடன் மட்டுமன்றி இதர கடன்களையும் வசூலிக்கக் கூடாது என்று வங்கிகளுக்கு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ரூ.85 கோடியை ஒதுக்கீடு செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட இடுக்கி, வயநாடு மாவட்ட விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வது குறித்து பரிசீலனை செய்யும்படி கடன் நிவாரண ஆணையத்துக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.