பாகிஸ்தானில் இந்திய விமானப்படை தாக்குதல் ‘சேட்டிலைட் புகைப்படம்’

Read Time:5 Minute, 43 Second

இந்திய விமானப்படை பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய பின்னர் மார்ச் 4-ம் தேதி சேட்டிலைட் புகைப்படம் கிடைத்துள்ளதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய விமானப்படை விமானங்கள் எல்லையைத் தாண்டி சென்று பாகிஸ்தானின் பாலகோட்டில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாமை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

இதனையடுத்து 300-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் உயிரிழந்தனர் என பா.ஜனதா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் இந்தியாவில் அரசியல் கட்சிகள் இடையே கடும் மோதல் காணப்படுகிறது. எதிர்க்கட்சிகளில் சில கட்சிகள் ஆதாரம் கேட்டனர். நீங்கள் இந்தியப்படையின் வலிமையை சந்தேகிக்கிறீர்களா, சிறுமைப்படுத்துகிறீர்களா என பிரதமர் மோடி விமர்சனம் செய்தார். பாகிஸ்தானின் ஜெய்ஷ் மதப்பள்ளியும் தாக்குதலில் சிக்கியது என தகவல் வெளியாகியது. ஜெய்ஷ் பயங்கரவாத இயக்கமும் இந்தியா தாக்குதல் நடத்தியது என்றது.

இந்நிலையில் இந்திய விமானப்படையின் தாக்குதல் தொடர்பாக சேட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகினால் உண்மை வெளியாகும் என ஒருதரப்பு கூறியது.

ராய்டர்ஸ் புகைப்படம்

இந்நிலையில் இந்திய விமானப்படை தாக்குதல் (பிப்ரவரி 26-ம் தேதி) நடத்திய பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படம் எங்களுக்கு கிடைத்துள்ளது என சர்வதேச செய்தி நிறுவனமான ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. மிகவும் நேர்த்தியான புகைப்படம் எங்களுக்கு கிடைத்துள்ளது. இதில் இந்திய விமானப்படைகள் இலக்காக நிர்ணயம் செய்த ஜெய்ஷ் கட்டிடம் மார்ச் 4 புகைப்படத்தில் எந்தஒரு பாதிப்பும் இல்லாமல் காட்சியளிக்கிறது என தெரிவித்துள்ளது.

சேட்டிலைட் புகைப்படம் ஒப்பீடு.

பாலகோட்டின் ஜாபா கிராமத்தில் ஜெய்ஷ் முகாம் குறிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு எந்தஒரு விளைவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. சேட்டிலைட் புகைப்படங்கள் சான்பிரான்சிகோவை தலைமையகமாக கொண்டு செயல்படும் பிளாணட் லேப்ஸ் இன்ஸ் என்ற நிறுவனத்தால் எடுக்கப்பட்டது என ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே எங்களுக்கு சிறப்பு பேட்டியளித்த உள்ளூர் மக்கள், வெடிகுண்டுகள் வெடிக்கும் சத்தத்தை கேட்டோம். ஆனால் எந்தஒரு கட்டிடமும் சேதம் அடைந்ததாக தெரியவில்லை. உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாக தெரியவில்லை என கூறியதாகவும் ராய்டர்ஸ் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் இலக்கு தப்பியதா?

ஜெய்ஷ் பயங்கரவாத அமைப்பின் மதப்பள்ளி கட்டிடம் சேதம் இல்லாமல் காட்சியளிக்கும் சேட்டிலைட் புகைப்படம் தொடர்பாக அத்துறையின் வல்லுநர்கள் பேசுகையில், இந்தியாவின் இலக்கு தப்பியதா? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

சேட்டிலைட் புகைப்படங்கள் ஆய்வில் 15 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஜெப்ரி லிவிஸ் பேசுகையில், “மிகவும் நேர்த்தியான இப்புகைப்படத்தில் கட்டிடங்கள் சேதம் அடைந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை,” என தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படையின் தாக்குதல் அரசியல் லாபத்திற்கானதா? சில எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் நிலையில் இந்த சேட்டிலைட் புகைப்படம் இந்திய அரசியலில் ஒரு புயலை கிளப்பும் என்றே பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இந்திய விமானப்படை தாக்குதலின் பேசு வீசப்பட்ட குண்டுகள் கட்டிடத்தில் பாய்ந்துள்ளது, ஆனால் பெருமளவு தாக்குத்தை ஏற்படுத்தவில்லை எனவும் சொல்லப்படுகிறது.

300 மரங்களுடையதா?

இந்திய அரசியல் கட்சிகள் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்ட நிலையில், இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய பாலகோட்டில் 300 செல்போன்களை பயன்படுத்தியது மரங்களா? என ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பினார். அசாம் மாநிலம் துப்ரியில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படைகளுக்காக கண்காணிப்பு அமைப்பை தொடங்கி வைத்த ராஜ்நாத் சிங் பேசுகையில், “தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு 300 மொபைல் இணைப்புகள் அங்கு செயல்பட்டது என தெரிவித்தது. அவையனைத்தும் மரங்களால் பயன்படுத்தப்பட்டதா? உங்களுக்கு தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு மீதும் நம்பிக்கையில்லையா?” என கேள்வி எழுப்பி இருந்தார். இப்போது சேட்டிலைட் புகைப்படம் மாறாக வெளியாகியுள்ளது.