டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டால் டெல்லி மக்களுக்கே 85% வேலைவாய்ப்பு – கெஜ்ரிவாலின் அதிரடி!

Read Time:3 Minute, 31 Second

டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டால் வேலைவாய்ப்பில் 85 சதவிதம் அம்மாநில மக்களுக்கே என்று கெஜ்ரிவால் உறுதியளித்துள்ளார்.

“மத்திய அரசின் வரிகளுக்கு இரண்டாவது மிக உயர்ந்த தொகையை டெல்லி மக்கள் அளித்துள்ளனர். ஆனால் மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட பங்கு வெறும் 325 கோடி மட்டுமே” என கூறியுள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் டெல்லிக்கு தனிமாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

2019 பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் கெஜ்ரிவால் தீவிரமாக இறங்கியுள்ளார். மாநிலத்தில் காங்கிரஸ், பா.ஜனதா, ஆம் ஆத்மி தனித்தனியாக களமிறங்குகிறது. காங்கிரஸ் கூட்டணிக்கு கெஜ்ரிவால் காத்திருந்த நிலையில் தனித்துப் போட்டி என காங்கிரஸ் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மாநிலத்திற்கு தனிமாநில அந்தஸ்ந்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக ஆம் ஆத்மி தரப்பில் வைக்கப்படுகிறது. மாநிலத்தில் ஆம் ஆத்மிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. கெஜ்ரிவால் அரசின் செயல்பாட்டிற்கு நல்ல மதிப்பெண்களையே கொடுத்துள்ளனர் என்பது சி ஓட்டர்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தீவிரமாக பிரசாரம் செய்யும் கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார்.

டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டால் டெல்லி மக்களுக்கு வேலைவாய்ப்புகளில் 85% இடம் ஒதுக்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறார்.

70 ஆண்டுகளில், தமிழ்நாடு, மராட்டியம், ஒடிசா, அசாம் மற்றும் கோவா மாநிலங்கள் ஆனது. ஆனால், டெல்லி இன்னும் சிக்கிக் கொண்டு உள்ளது. இந்த முரண்பாட்டை எதிர்கொள்வதற்கு டெல்லி மக்கள் என்ன தவறு செய்திருக்கிறார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மால்வியாவில் நடைபெற்ற கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசுகையில், மாநில அந்தஸ்து அளிக்கப்பட்டதும், அனைவருக்கும் வீடு மற்றும் வேலைவாய்ப்புகள் உறுதிசெய்யப்படும். 48 மணி நேரத்திற்குள் இரண்டு லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், 10 ஆண்டுகளுக்குள் டெல்லியில் வசிக்கும் அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும் என உறுதியளித்துள்ளார். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் பணிபுரிவதைக் குறித்து அனைத்து மாநிலங்களிலுமே அதிருப்தி நிலவிவருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் மராட்டியம், கர்நாடகாவில் சொந்த மாநில மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளது அரவிந்த் கெஜ்ரிவாலின் அறிவிப்பு.