பாராட்டு யாருக்கு? சண்டையில் ஒருவரை, ஒருவர் செருப்பால் அடித்துக்கொண்ட பா.ஜனதா எம்.எல்.ஏ. – எம்.பி….!

Read Time:2 Minute, 31 Second

பாராட்டு யாருக்கு என்ற சண்டையில் பா.ஜனதா எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட பரபரப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் சாந்த்கபிர் நகரில் அமைக்கப்பட்ட சாலைத்திட்டம் ஒன்றுக்கு பெயர்ப்பலகை கல்லில் செதுக்கி வைக்கப்பட்டிருந்தது. பெயர் பலகையில் சாந்த்கபிர் நகர் மக்களவை தொகுதி பா.ஜனதா எம்.பி. சரத் திரிபாதியின் பெயர் இடம்பெறவில்லை. இதற்கு மேந்தாவல் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. ராகேஷ் பாகல்தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பாக கூட்டம் நடைபெற்றது. செய்தியாளர்கள், பொதுமக்கள் மத்தியில் நடந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். என்னுடைய பெயர் ஏன் இடம்பெறவில்லை என்று எம்.பி. சரத் திரிபாதி கேட்டுள்ளார்.

உடனடியாக எம்.எல்.ஏ. ராகஷ் பாகல், நான்தான் பெயரை பதிவு செய்யக் கூடாது என்று கூறினேன் என்றார்.

இதனையடுத்து இரண்டு பேருக்கும் இடையே வாய் தகராறு தொடங்கியது. அதிகாரிகள் பலர் இருக்க வாய்த்தகராறு கைகலப்பாக வெடித்தது. இருவரும் தங்களது செருப்பை கழற்றி மாறி, மாறி அடித்துக் கொண்டனர். இது அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. போலீசார் மற்றும் செய்தியாளர்கள் தடுக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் பலனில்லை.

ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ காட்சி இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது. இந்த காட்சி வீடியோவாக எடுக்கப்பட்டு தற்போது இணைய தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. வீடியோவின் இறுதிக் காட்சியில் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோர் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இந்த செருப்படி தாக்குதல் சம்பவம் பா.ஜனதா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.