போர் பதற்றத்தின் போது 6 வீரர்கள் உயிரிழந்த ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் என்ன? விமானப்படை விசாரணை தீவிரம்

Read Time:4 Minute, 22 Second

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் என்ன? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை, பாகிஸ்தான் எல்லையில் புகுந்து பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது குண்டுகள் வீசி அழித்தது. இதற்கு பழிவாங்கும் விதமாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலாம் என இந்திய விமானப்படை எல்லைப்பகுதியில் இரவு, பகலாக விழிப்புடன் கண்காணித்தது. காஷ்மீர் மாநிலம் புட்காம் பகுதியில் கண்காணிப்பு பணியில் எம்.ஐ.-17 ரக ஹெலிகாப்டர் ஈடுபட்டு வந்தது.

இந்தியாவிற்குள் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறிய 27-ம் தேதி, ஹெலிகாப்டர் காலை 10.10 மணி அளவில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. ஹெலிகாப்டர் தரையில் விழுந்து இரண்டாக நொறுங்கி தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த விமானப்படை வீரர்கள் 6 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் விழுந்ததால் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த கிராமவாசி ஒருவரும் உயிரிழந்தார்.

“இந்திய ஹெலிகாப்டரை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது விபத்துக்குள்ளானது. முதலில், விபத்தில் சிக்கியது அதிவேக போர் விமானம் என கருதினோம். பின்னர் தான் அது ஹெலிகாப்டர் என தெரியவந்தது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்று விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் அத்துமீறிய போது 10 நிமிடங்களில் விபத்து நேரிட்டது. இப்போது இந்த ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் என்ன என்பது தொடர்பாக விரிவான விசாரணையை விமானப்படை தொடங்கியுள்ளது. ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பும், குறுஞ்செய்தி எதுவும் வரவில்லை என Economictimes செய்தி வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் சேவையில் இருக்கும் Mi17V5 ஹெலிகாப்டர்களில் பொதுவாக தொழில்நுட்ப சிக்கல்களை உருவாக்காது என கூறப்படுகிறது. ஹெலிகாப்டர் விபத்துக்குள் சிக்கிய நேரம் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சம் அடைந்திருந்த நேரமாகும். நெருக்கடியான நிலையில் கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டது. இந்திய ஹெலிகாப்டரை நாங்கள் சுட்டு வீழ்த்தவில்லை என பாகிஸ்தான் கூறியுள்ளது.

இதற்கிடையே சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தரப்பில் ஹெலிகாப்டர் கீழே விழுவதற்கு முன்னதாக வானில் வெடிக்கும் சத்தம் கேட்டதாக குறிப்பிட்டுள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அறிக்கை வருவதற்கு முன்னதாக விபத்து தொடர்பான காரணத்தை நாங்கள் யூகிக்க முடியாது, விசாரணை அறிக்கைக்கு காத்திருக்கிறோம் என கூறியுள்ளது.

15 நாட்களுக்குள் காரணம் என்ன என்பது தொடர்பாக பதில் தெரிவிக்கப்படும் என விபத்தில் சிக்கிய ராணுவ வீரர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. “ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரிக்கிறோம்” என விமானப்படை தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளது.