நான் பயங்கரவாதம், ஏழ்மையை அகற்ற முயற்சி செய்கிறேன். ஆனால், எதிர்க்கட்சிகள் என்னை அகற்ற முயற்சி செய்கின்றன என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
2019 நாடாளுமன்றத் தேர்தலை அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக மேற்கொண்டு உள்ளனர்.
கர்நாடகாவின் கலபுராகி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு பிரதமர் மோடி பேசுகையில், 125 கோடி மக்களின் ஆசீர்வதத்தை கொண்டிருக்கும் ஒருவர் யாருக்கு பயப்படவேண்டியது இல்லை. இந்தியாவும், 125 கோடி மக்களும் இந்த வலிமையை கொடுத்துள்ளனர். இந்தியா ஒரு புதிய வகையான தைரியத்தை உலகிற்கு காட்டியுள்ளது. இது மோடியால் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களால் என்றார்.
பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை 26-ம் தேதி இந்திய விமானப்படைகள் அழித்ததை குறிப்பிட்டு இவ்வாறு பேசினார்.
மேலும் பேசுகையில், எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணி ஒரு கலப்படம். தேசம் ஒரு வலுவான அரசாங்கத்தை விரும்புகிறது. கர்நாடகாவில் ஒரு உதவியற்ற அரசாங்கம் செயல்படுகிறது. இங்குள்ள முதல்வர் குமாரசாமி “ரிமோட் கண்ட்ரோல் சி.எம்.”. இங்குள்ள காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு மக்களை முதுகில் குத்திவிட்டு ஆட்சிக்கு வந்துள்ளது. இங்குள்ள குமாரசாமி அரசு விவசாயிகளுக்கு அநீதியை செய்கிறது. பிரதான் மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டத்தில் கர்நாடக அரசு ஒத்துழைப்பு அழிக்கவில்லை.
மாநிலம் வலுவாக வேண்டும் என்றால் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக வேண்டும். வடகிழக்கு வளர்ச்சிக்கும் என்னுடைய அரசாங்கம் முன்னுரிமை கொடுக்கிறது என்றார்.