பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கையென ஏமாற்ற முயற்சிக்கும் பாகிஸ்தான்…

Read Time:5 Minute, 7 Second

புல்வாமா தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு சர்வதேச நாடுகளிடம் இருந்து கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதிலிருந்து தப்புவதற்காக பயங்கரவாதி மசூர் அசாரின் சகோதரன் மவுனாலா அப்துல் அஸ்கார் உள்பட 44 பயங்கரவாதிகளை கைது செய்ததாக அறிவித்தார் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக்யார் கான் அப்ரீடி.

இது ஒட்டுமொத்தத்தில் ஒரு ஏமாற்று நடவடிக்கை என்பது 100 சதவிதம் உண்மையாகும். பயங்கரவாதிகள் அனைவருக்கும் அந்நாட்டின் உளவுத்துறை ராஜ மரியாதையை கொடுத்து வருகிறது.

2009 மும்பை நகரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதில் குற்றவாளிகள் மீது பாகிஸ்தான் எப்படி நடவடிக்கை எடுத்தது என்பது உலகிற்கே தெரியும். முக்கிய குற்றவாளியான ஹபீஸ் சயீத், கமாண்டர் லக்வியை எந்தஒரு நடவடிக்கையுமின்றி பாகிஸ்தான் தப்பவிட்டது. சர்வதேச சமூதாயமும் உறங்கியது. இந்தியா வழங்கிய ஆவணங்கள் எல்லாம் எந்த குப்பைக்கு சென்றது என்று தெரியாது.

லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ஹபீஸ் சயீத் அங்கு அரசியல் கட்சியை தொடங்க முயற்சிக்கிறான். அப்போது சர்வதேச நாடுகள் எதிர்க்கவும் அரசியல் கட்சிக்கு பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கவில்லை. ஆனால் இம்ரான் கான் ஆட்சிக்கு வந்ததும் உள்துறை அமைச்சரான அப்ரீடியை லஷ்கர் பயங்கரவாதிகள் சந்திக்கிறார்கள். அவர்களிடம் எந்த அழுத்தமும் உங்களை ஒன்றும் செய்யமுடியாது, ஹபீஸ் சயீத்தை யாரும் தொட முடியாது என அப்ரீடி உறுதியளிக்கிறார். இதுதொடர்பான வீடியோ வெளியாகியது.

பயங்கரவாதமும், இம்ரான் கட்சியும்

பாகிஸ்தான் புதிய பிரதமராகியுள்ள இம்ரான் கானின் கட்சியொன்றும் புனிதமான கட்சியெல்லாம் கிடையாது. பயங்கரவாதத்தை சகித்துக்கொள்ள மாட்டோம் என்கிறார். அவருடைய கட்சி பாகிஸ்தான் தெரிக் இ இன்சாப் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கிறது என்பது புதியது கிடையாது. கைபர் பக்துன்வாகா மாகாணத்தில் ஆட்சியிலிருக்கும் இம்கான் கட்சி 2018 தொடக்கத்தில் துரால் உலூம் ஹக்கானியா என்ற அமைப்புக்கு 300 மில்லியனை வழங்கியுள்ளது. இவ்வமைப்பு ஜிகாத்தின் பல்கலைக்கழகம் என அறியப்படுகிறது.

தலிபான் மற்றும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பை கொண்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானில் இப்போதும் ஏழ்மையில் இருக்கும் இளைஞர்கள் பயங்கரவாத செயல்களுக்கு பயிற்சி பெற்று வருகிறார்கள்.

ஜெய்ஷ் அமைப்புடன் தொடர்பு

சிஎன்என் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மஹ்முத் குரேஷி, மசூத் அசார் பாகிஸ்தானில் தான் இருக்கிறார். ஆனால் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார், வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு அவரது உடல்நிலை மோசமாக உள்ளதால் சிகிச்சை பெற்று வருகிறார் என்றார்.

குரேஷி, மசூத் அசார் செயல்பாட்டை ஒப்புக்கொண்ட நிலையில், அந்நாட்டு ராணுவ ஜெனரல், காஷ்மீரின் புல்வாமா நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்று கொண்டது என்றார். ஆனால் கபூர் கூறுகையில் பாகிஸ்தானுக்குள் இருந்து அந்த இயக்கம் இதனை கூறவில்லை எனவும், பாகிஸ்தானில் இந்த இயக்கம் இல்லை, ஐ.நா. அமைப்பு மற்றும் பாகிஸ்தானால் கூட இந்த இயக்கம் தடை செய்யப்பட்டு உள்ளது என்றார்.மேலும் யாருடைய நெருக்கடியினாலும் நாங்கள் எதனையும் செய்யவில்லை என்றார். 4 நாட்களில் மாறுபட்ட தகவல்களை அளிக்கும் பாகிஸ்தான், பயங்கரவாதம் மீது நடவடிக்கை எடுக்கும் என்பது பகல் கனவாகும். இந்தியாவிற்கு எதிராக தாக்குதலை நடத்ததான் ஜெய்ஷ் பயங்கரவாத இயக்கத்தை தொடங்கினோம் என அந்நாட்டின் முன்னாள் அதிபர் முஷரப் கூறியுள்ளார். இந்தியாவிற்கு எதிரான மறைமுக போருக்கு பயங்கரவாதிகளை வளர்க்கும் போக்கை பாகிஸ்தான் மாற்றிக்கொள்ளும் என்று எதிர்பார்ப்பது பெரும் தவறாகவே அமையும்.