‘பாகிஸ்தானின் போஸ்டர் பாய்ஸ்’ யார்? பாக். உளவுத்துறையை இந்தியாவிற்கு அழைத்தது யார்? ராகுல் காந்தி

Read Time:2 Minute, 18 Second

‘பாகிஸ்தானின் போஸ்டர் பாய்ஸ்’ என எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்த பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பதில் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இந்திய விமானப்படை பாகிஸ்தானிற்குள் சென்று பயங்கரவாத முகாம்களை குண்டுகளை வீசி அழித்தது தொடர்பாக கேள்விகளை எழுப்பும் எதிர்க்கட்சிகளை பா.ஜனதா விமர்சனம் செய்கிறது. இதுபோன்று ஆதாரங்களை கேட்கும் எதிர்க்கட்சியினரை பிரதமர் மோடி பாகிஸ்தானின் ‘போஸ்டர் பாய்ஸ்’ என விமர்சனம் செய்தார். மத்திய பிரதேச மாநிலம் தாரில் பிரதமர் மோடி பேசுகையில் “இங்கு மோடியை அவமதிக்கிறார்கள், அங்கு பாகிஸ்தானில் பாராட்டுக்களை பெறுகிறார்கள். அவர்களுடைய புகைப்படங்கள் பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் வெளியிடப்படுகிறது. இப்படி அவர்கள் பாகிஸ்தானின் போஸ்டர் பாய்களாகியுள்ளனர்” என விமர்சனம் செய்தார்.

இதற்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாகிஸ்தான் சென்றது யார்? பாகிஸ்தான் உளவுத்துறையை இந்தியாவிற்கு அழைத்தது யார்? என கேள்வியை எழுப்பியுள்ளார்.

“பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் குடும்பத்தின் திருமண விழாவிற்கு சென்றது யார்? பதன்கோட் விமானப்படை தளத்திற்கு பாகிஸ்தான் உளவுத்துறையை அழைத்தது யார்? யார் பாகிஸ்தானின் போஸ்டர் பாய்?” என பிரதமர் மோடிக்கு கேள்வியை எழுப்பியுள்ளார். 2015-ம் ஆண்டு நவாஸ் செரீப்பின் பேத்தி திருமணத்திற்கு பிரதமர் மோடி பாகிஸ்தான் சென்றிருந்தார். 2016-ல் பதன்கோட் விமானப்படை தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது பாகிஸ்தான் உளவுத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டது இதனை குறிப்பிட்டு ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.