ராணுவ வீரர்களின் ரத்தத்தில் வெற்றிப்பெற முடியாது – மம்தா பானர்ஜி காட்டம்

Read Time:3 Minute, 20 Second

ராணுவ வீரர்களின் ரத்தத்தில் நீங்கள் தேர்தலில் வெற்றிப்பெற முடியாது என மம்தா பானர்ஜி பா.ஜனதாவை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

புல்வாமா தாக்குதல், இந்திய விமானப்படையின் அதிரடி தாக்குதலை முன்வைத்து பா.ஜனதாவும், எதிர்க்கட்சிகளும் பல்வேறு கருத்துக்களை முன்வைக்கிறது. இருதரப்பும் அரசியலாக்க வேண்டாம் என கூறுகிறது. ஆனால் அரசியல் செய்யும் வகையில் கருத்துக்களை தெரிவித்து வருகிறது. இந்திய படைகள் பா.ஜனதாவிற்கு சொந்தமானது கிடையாது, தேசத்திற்குரியது என திரிணாமுல் காங்கிரஸ் விமர்சனம் செய்கிறது.

பா.ஜனதாவை கடுமையாக விமர்சனம் செய்துள்ள மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, நீங்கள் ராணுவ வீரர்களின் ரத்தத்தில் தேர்தலில் வெல்ல முடியாது. ஒரு ராணுவ வீரர் நாட்டுக்காக ரத்தம் சிந்துகிறார். ராணுவ வீரர்கள் இந்த நாட்டை சேர்ந்தவர்கள், அவர்கள் அரசியலில் ஈடுபடுவது கிடையாது. தியாகிகளை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். நாங்கள் மோடி மற்றும் பா.ஜனதாவிற்கு எதிராக இருக்கிறோம்.

மோடி பா.ஜனதாவை ஒரு தனியார் அமைப்பாக மாற்றிவிட்டார். மோடி எதிராக யாராவது ஏதாவது பேசினால், அவர்கள் பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என முத்திரை குத்துகிறார்கள். என்னுடைய தந்தை ஒரு சுதந்திர போராளியாவார், நான் அவர்களிடமிருந்து (பா.ஜனதா) தேசபக்தி கற்றுக்கொள்ள வேண்டியதில்லை என கூறியுள்ளார்.

ஹவுராவில் மம்தா பானர்ஜி பேசுகையில் “பிரதமர் மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒன்றும் செய்யவில்லை, அதனால்தான் நீங்கள் ஏவுகணைகள், குண்டுகள் மற்றும் ராணுவ வீரர்களின் சடலங்களை காட்ட வேண்டியதுள்ளது. நீங்கள் ராணுவ வீரர்களின் சடலங்கள் மீது சந்தர்ப்பவாத அரசியலை செய்கிறீர்கள், இதனால் நீங்கள் வெட்கப்படுகிறீர்களா? நமது நாட்டிற்காக நமது ஆயுதப்படைகளுக்கு நாம் துணை நிற்கிறோம், ஆனால் மோடி ஆட்சிக்கு ஆதரவாக இல்லை” என்று கூறினார்.

பாக்கிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் பயங்கரவாத பயிற்சி முகாம்களில் நடத்திய தாக்குதல்களில் ஏற்பட்ட விளைவைப் பற்றி கேள்வி எழுப்பியவர்கள் பாகிஸ்தானியர்களாக முத்திரை குத்தப்படுகிறார்கள், நாம் அனைவரும் அயல் நாட்டை சேர்ந்தவர்களாக பார்க்கப்படுகிறோம், மோடி மட்டும் இந்தியர் என சொல்லப்படுகிறார். பிரதமர் மோடி தன்னைமட்டும் தேசப்பற்றாளர் என்று முத்தியிட்டுக்கொள்ள முயற்சி செய்கிறார் எனவும் விமர்சனம் செய்துள்ளார் மம்தா பானர்ஜி.