அயோத்தி வழக்கில் மத்தியஸ்தம் செய்ய அனுமதி, உச்சநீதிமன்ற உத்தரவின் 10 முக்கிய தகவல்கள்…

Read Time:3 Minute, 46 Second

அயோத்தி வழக்கில் மத்தியஸ்தம் செய்ய அனுமதி, உச்சநீதிமன்ற உத்தரவின் 10 முக்கிய தகவல்கள்…

அயோத்தி வழக்கில் மத்தியஸ்தம் செய்ய அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அடங்கிய 3 பேர் கொண்ட குழுவை நியமனம் செய்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் ராமஜென்ம பூமி, பாபர் மசூதி நிலம் யாருக்கு சொந்தமானது என்பதில் பிரச்சனை தொடர்கிறது. இவ்வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், 2010-ம் ஆண்டு வழக்கில் தொடர்புடைய சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லீலா ஆகிய 3 தரப்பினரும் சமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என தீர்ப்பு அளித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

வழக்குகளை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வின் முன் நிலுவையில் உள்ளன.
இதற்கிடையே பிரச்சனைக்கு மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு காண வழி உண்டா? என்று உச்சநீதிமன்றம் கேள்வியை எழுப்பியது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்ற நிலையில் பிரச்சினையில் மத்தியஸ்தர்களை நியமித்து, இணக்கமான தீர்வு காண்பதற்கு அனுமதியை உச்சநீதிமன்றம் வழங்கியது. உச்சநீதிமன்ற உத்தரவின் 10 முக்கிய தகவல்கள்:-


உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்டத்தில் மத்தியஸ்தம் செய்வதற்கான நடைமுறைகள் நடைபெறும்.


பைசாபாத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு உத்தரபிரதேச அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து தர வேண்டும்.


உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான 3 பேர் கொண்ட மத்தியஸ்தர்கள் குழுவில், வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம் பெறுவர்.


மத்தியஸ்தம் செய்வதற்கான பணி ஒரு மாதத்தில் தொடங்கப்பட வேண்டும். இடைக்கால விசாரணையை 4 மாதங்களில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.


மத்தியஸ்தம் செய்வதின் மொத்த பணியும் 8 மாதங்களில் முடிய வேண்டும்.


உச்சநீதிமன்ற மேற்பார்வையிலான மத்தியஸ்த பணி ரகசியமாக இருக்கும். மத்தியஸ்த குழுவின் பேச்சுவார்த்தை விவரங்கள் தொடர்பான எந்த செய்தியையும் ஊடகங்கள் வெளியிடக் கூடாது.


மத்தியஸ்தர்கள் நடவடிக்கை அனைத்தையும் கேமரா மூலம் பதிவு செய்ய வேண்டும்.


மத்தியஸ்தம் செய்யும் குழு தேவைப்பட்டால் மேலும் உறுப்பினர்களை சேர்த்துக்கொள்ளலாம், ஏதாவது கடினமான நிலையென்றால் உச்சநீதிமன்றத்திடம் தெரிவிக்கலாம்.


மத்தியஸ்த நடவடிக்கையில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் குழுவினர் உச்ச நீதிமன்ற பதிவாளரை தொடர்பு கொள்ள வேண்டும்.


இந்த விவகாரம் 2.77 ஏக்கர் நிலப்பரப்பு பற்றியது கிடையாது, மத உணர்வுகள் பற்றியது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.