மக்கள் நீதி மய்யம், மகளிர் நீதி மய்யம் ஆக மாறிவிடும்… எங்கும் நகைச்சுவை…. கோவை சரளா

Read Time:2 Minute, 57 Second

மக்கள் நீதி மய்யம் கட்சியில் நடிகை கோவை சரளா இணைந்தார்.

2019 தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் நிலையை கமல் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

மக்கள் நீதி மய்யம் கூட்டணி இல்லாமல், தனித்துப் போட்டியிடவே வாய்ப்பு அதிகமாக உள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலை பிரசாரம் செய்யவும் அழைக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அக்கட்சியின் தரப்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு விநியோகமும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று உலக மகளிர் தினம் சென்னையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் கமலுடன் இணைந்து பல படங்களில் நடித்த கோவை சரளா தன்னை மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியில் ஏற்கனவே ஸ்ரீபிரியா முக்கிய தலைவராக உள்ளார்.

குடும்பக் கட்சி

கமல்ஹாசன் பேசுகையில், திமுக, தேமுதிகவை தாக்கிப் பேசினார். “எனக்கு பிறகு என்னுடைய மகள்களோ, என்னுடைய மரும்கன்களோ கட்சிக்கு எடுத்துக் கொள்ள மாட்டார்,” என்றார். திமுகவில் கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் அவருடைய மகன் முக ஸ்டாலின் கட்சிக்கு தலைவராகியுள்ளார். தேமுதிகவில் விஜயகாந்தின் மைத்துனர் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆகியுள்ளார். இதனை குறிப்பிட்டு பேசியுள்ளார். தமிழகத்தில் தி.மு.க., அதிமுகவை ஊழல் கட்சிகள் என விமர்சனம் செய்த அவர் இருகட்சிகளுடன் கூட்டணியில்லை என்பதை தெளிவுப்படுத்திவிட்டார்.

கோவை சரளா

கோவை சரளா பேசுகையில் எப்போதும் போல தன்னுடைய நகைச்சுவை கலந்து பேசினார். எந்த இடத்துக்கு போவது என்று தெரியாமல் அப்படியே நின்று கொண்டிருக்கும் போது இந்த இடம் நல்லதாக தெரிந்தது. அதனால் தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன்.

போகிற போக்கைப் பார்த்தால் ‘மக்கள் நீதி மய்யம்’, ‘மகளிர் நீதி மய்யம்’ ஆக மாறிவிடும் என நினைக்கிறேன். பெண்கள் வீட்டின் கண்கள் என்ற கதையெல்லாம் இனி இருக்கவே கூடாது. பெண்கள் நாட்டின் கண்களாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் பல கட்சிகள் உள்ளன. ஆனால், மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு மக்கள் நீதி மய்யம் ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. கட்சியின் வெற்றிக்காக பணியாற்றுவோம் என கூறியுள்ளார் கோவை சரளா.