மதுரை உள்பட தமிழகத்தில் மேலும் 4 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Read Time:4 Minute, 2 Second

மதுரை உள்பட தமிழகத்தில் மேலும் 4 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்திய ராணுவத்தில் பணியாற்றுபவர்களின் குழந்தைகளின் படிப்புக்காக 1963-ம் ஆண்டு மத்திய அரசால் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்பட்டது. பின்னர் மத்திய அரசியல் பணியாற்றும் ஊழியர்களின் குழந்தைகளும் சேரலாம், பொதுமக்களும் தங்களுடைய குழந்தைகளை சேர்க்கலாம் என சேவை விஸ்தரிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் 1,199 பள்ளிகளும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் உள்ளன.

இப்பள்ளிகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, சி.பி.எஸ்.இ. என்ற மத்திய இடைநிலை கல்வி வாரியம் நிர்வகித்து வருகிறது. குறைந்த கல்வி கட்டணத்தில் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் நிறைவான கல்வி வழங்கப்படுகிறது. இப்பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், இந்தியா முழுவதும் மேலும் 50 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் 4 பள்ளிகள் தமிழகத்தில் வருகிறது.

மதுரை, கோவை, திருப்பூர் மற்றும் சிவகங்கை ஆகிய நகரங்களில் இந்த பள்ளிகள் அமைய உள்ளது. இப்பள்ளிகளின் சேவை தொடங்கும் போதும் 4000 மாணவர்கள் பயன்பெறுவார்கள். மதுரையில் இடையாபட்டி இந்தோ – திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படை முகாமில் இப்பள்ளி அமைய உள்ளது. கோவையில் எல்லைப் பாதுகாப்பு படை வளாகத்திலும், சிவகங்கையில் இழுப்பைகுடியில் இந்தோ – திபெத்தியன் எல்லை பாதுகாப்பு படை வளாகத்திலும், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையிலும் தொடங்க உள்ளது. திருப்பூரில் அமைய உள்ள பள்ளிக்கு மாநில அரசு நிதியுதவி அளிக்க உள்ளது.

பள்ளிகளில் சேர்க்கை

செயல்பாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில்தான் மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. தற்போது முதலாம் வகுப்பில் சேர ஆன்லைன் வழியே விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. முதலாம் வகுப்பில் சேர மார்ச் 19-ம் தேதி மாலை 4 மணிக்குள் www.kvsonlineadmission.in ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு வகுப்பிலும் 40 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இதில் 25 சதவிகித இடங்கள், கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சேர்க்கப்படுகின்றன.

முதலாம் வகுப்பில் மட்டும் RTE பின்பற்றப்படுவதால், விண்ணப்பிக்கும்போதே இதைக் குறிப்பிட வேண்டியது அவசியம். அப்படி விண்ணப்பிக்கும்போது, ஒருவர் மூன்று பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம். ஆனால், ஒரே பள்ளியில் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பம் அளிக்கக் கூடாது. விண்ணப்பத்தில் மொபைல் எண், இமெயில் முகவரி, குழந்தையின் புகைப்படம், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக இருந்தால் வருமானச் சான்றிதழ், பணியிலிருந்து மாற்றலாகியிருந்தால் அதற்கான சான்று போன்றவற்றையும் இணைக்க வேண்டும்.