அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யும் மூவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள்…!

Read Time:4 Minute, 56 Second

அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யும் மூவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

அயோத்தி வழக்கில் மத்தியஸ்தம் செய்ய அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அடங்கிய 3 பேர் கொண்ட குழுவை நியமனம் செய்துள்ளது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான 3 பேர் கொண்ட மத்தியஸ்தர்கள் குழுவில், வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம் பெறுவர். மத்தியஸ்தம் செய்வதற்கான பணி ஒரு மாதத்தில் தொடங்கப்பட வேண்டும். இடைக்கால விசாரணையை 4 மாதங்களில் தாக்கல் செய்யப்பட வேண்டும். மத்தியஸ்தம் செய்வதின் மொத்த பணியும் 8 மாதங்களில் முடிய வேண்டும்.

இந்த குழுவில் இடம்பெறும் மூவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

இப்ராஹிம் கலிபுல்லா

உச்சநீதிமன்றம் நியமனம் செய்துள்ள குழுவில் தலைவராக இடம்பெற்றுள்ளவர் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா. பல்வேறு வழக்குகளில் நல்ல முடிவுகளை எட்டியவர், தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், ஜம்மு காஷ்மீர் மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றிய கலிபுல்லா, உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து 2016-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

“பிரச்சனையை சுமூகமாக தீர்க்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்வோம்,” என கூறியுள்ளார்.

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

வாழும் கலை அமைப்பின் தலைவரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கும்பகோணத்தை சேர்ந்தவர். அயோத்தி பிரச்னைக்கு சுமுக தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக ஏற்கனவே குறுப்பிட்டார். 2107 நவம்பரில் பேசுகையில், “அயோத்தி விவகாரம் போன்ற பிரச்னைகளுக்கு, பேச்சு மூலம் தீர்வு காண்பது நல்லது. அனைத்து தரப்பினரிடமும் பேசி வருகிறேன். நான் எந்த ஒரு தரப்பையும் சார்ந்தவன் அல்ல.” என குறிப்பிட்டார். அவர் இவ்விவகாரத்தில் ஏற்கனவே அதிகாரபூர்வமற்ற வகையில் மத்தியஸ் பணியில் ஈடுபட்டார். சன்னி மற்றும் ஷியா வக்பு வாரியங்களை சேர்ந்தவர்கள், ராமஜென்மபூமி அமைப்பினர் என பல தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

ஸ்ரீராம் பஞ்சு

மத்தியஸ்த குழுவில் இடம்பெற்றுள்ள ஸ்ரீராம் பஞ்சு சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர் ஆவார். ஏற்கனவே பல வழக்குகளில் நீதிமன்றத்துக்கு உதவிடும் வகையில் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டவர். நீதி மற்றும் சட்ட விஷயங்களுடன் மத்தியஸ்த பேச்சுவார்த்தையை அணுகுவதில் திறமையானவர் என பெயர் பெற்றவர். மத்தியஸ்தம் தொடர்பான 2 புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார். மத்தியஸ்தம் மற்றும் சமரச நடவடிக்கைகளின் வளர்ச்சிக்காக அவருடைய பங்களிப்புக்கு விருதும் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய மத்தியஸ்தர்களின் சங்கத்தின் தலைவராகவும், சர்வதேச மத்தியஸ்த நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ளார்.

2016-ல் சென்னையில் ‘தி இந்து’ சார்பில் நடத்தப்பட்ட விவாதத்தில் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது, தேச துரோகச் சட்டம் எங்கிருந்து வந்தது? ஏன் இந்தியச் சட்டப் புத்தகத்தில் அது இடம்பிடித் தது? எது தேச பக்தி? எது தேச விரோதம்? உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினார் ஸ்ரீராம் பஞ்சு. ‘தேச துரோக வழக்கில் சிக்கும் நபர் கைது செய்யப்படுவார், ஜாமீன் மறுக்கப்படும், குடும்பம் நிலைகுலையும், அவருடைய வாழ்க்கை சின்னாபின்னமாகும். அத்தகைய அதிபயங்கரமான சட்டம் உட்சபட்ச சூழலில் மட்டுமே பிரயோகிக்கப்பட வேண்டும். ஒரு வருடைய பேச்சு வெறுப்பை உமிழ்ந்து, விரோதத்தைத் தூண்டி, வன்முறையைக் கட்டவிழ்த்தால் மட்டுமே அதை தேச துரோகம் எனலாம்’ என்று குறுப்பிட்டு இருந்தார்.