யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படுமா ராமப்பா கோவில்?

Read Time:3 Minute, 53 Second

தெலங்கானாவில் உள்ள 800 ஆண்டுகள் பழைமையான ராமப்பா கோவில் இவ்வாண்டு யுனெஸ்கோ பாரம்பர்ய சின்னமாக அறிவிக்கப்படும் போட்டியில் களமிறங்கியுள்ளது.

ஐ.நாவின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய மற்றும் பண்பாட்டு சின்னங்களை தேர்வு செய்வது வழக்கமாகும். இயற்கை, பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு மற்றும் கலை அடிப்படையில் இவை அறிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மாமல்லபுரம், தஞ்சைப் பெரிய கோவில், கங்கை கொண்ட சோழீச்சுவரம், தாராசுவரம் கோவில்கள் யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரிய மற்றும் பண்பாட்டு சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமப்பா கோவில்.

இவ்வருடம் வாரங்கல் கோவில் முதல் கட்டமாக பரிந்துரைப் பட்டியலில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. யுனெஸ்கோ அமைப்பின் பாரம்பரிய குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டு, ராமப்பா கோயிலை உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவிப்பார்கள். காகதீய பாரம்பரிய அறக்கட்டளையின் கடந்த ஏழு ஆண்டுகளால தொடர்ச்சியான முயற்சிகளுக்குப் பிறகு, கோவில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் இந்தியாவின் தேர்வாக சேர்க்கப்பட்டுள்ளது. உலக பாரம்பரிய இடம் பட்டியலில் இந்தியாவின் தரப்பில் ராமப்பா கோவிலை தேர்வு செய்ய ஆவணங்களை தயார் செய்யும் பணி 2012-ம் ஆண்டு தொடங்கியது. யுனஸ்கோவில் தாக்கல் செய்யப்பட வேண்டிய வேட்புமனுவில் ராமப்பா கோவில் தொடர்பாக முன்வைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது.

2015-ம் ஆண்டு பணிகள் முடிந்தது. 2016-ம் ஆண்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் ஜெய்பூர் சிட்டி மற்றும் ராமப்பா கோவில் என இரண்டு இடங்களையும் இந்திய அரசு விண்ணப்பத்தில் பரிந்துரை செய்தது. இப்போது ராமப்பா கோவிலை மட்டும் பரிந்துரை செய்துள்ளது. மாநில அரசும், மத்திய அரசை வலியுறுத்தியதால் இவ்வாண்டு இந்தியா தரப்பிலான போட்டியில் ராமப்பா கோவில் மட்டுமே உள்ளது.

ராமப்பா கோவில் சிற்பங்கள்.

ராமப்பா கோவில் வாரங்கல்லிலிருந்து 77 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இயற்கை எழில் மிகுந்து செம்மணற் கல்லால் அழகாக காட்சியளிக்கிறது. கோவில் பிரகாரம், உயரமான மாடம் என கட்டிடகலையில் சிறப்புமிக்கதாக அழகிய கலைப் பெட்டகமாக இருக்கிறது. இக்கோவில் கி.பி 1213 ம் ஆண்டு காகதீய அரசர் கணபதி தேவர் காலத்தில் அவரது படைத்தலைவர் ரேச்சர்ல ருத்திரன் என்பவரால் எழுப்பப்பட்டது. செம்மணற் கல்லால் எழுப்பப்பட்ட இக்கோவில், அழகிய தூண்கள், அதில் நளினம், அழகு நிறந்த குறுஞ்சிற்பங்கள் மனதை கொள்ளைக்கொள்கிறது. கோவிலை இந்திய தொல்லியல் துறையினர் தற்போது பராமரித்து வருகிறார்கள். ராமப்பா கோவில் யுனஸ்கோவால் தேர்ந்தெடுக்கப்பட்டால் தெலங்கானாவிலிருந்து அறிவிக்கப்படும் முதல் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக இதுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.