பா.ஜனதாவின் போஸ்டர்களில் அபிநந்தன் புகைப்படம்… நெட்டிசன்கள் விமர்சனம்

Read Time:6 Minute, 21 Second

பா.ஜனதாவின் போஸ்டர்களில் அபிநந்தனின் புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் இடையே வான்மோதல் நேரிட்ட போது பாகிஸ்தானின் எப் 16 விமானத்தை சுட்டு வீழ்த்தியவர் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன். அவர் சென்ற விமானமும் பாகிஸ்தான் தாக்குதலில் சிக்கியது. இதனையடுத்து பாகிஸ்தானில் சிக்கிய அவர், இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக 2 நாட்களில் இந்தியாவிற்கு திரும்பினார். மத்திய அரசு பயங்கரவாதத்தை அழிக்க எல்லையைத் தாண்டி மேற்கொண்ட நடவடிக்கை அனைத்து தரப்பிலும் பாராட்டப்பட்டது. ஆனால் அதற்கு பின்னால் இச்சம்பவங்களை முன்வைத்து அரசியல் செய்வது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

டெல்லியில் பா.ஜனதா தலைவர் விமானப்படையின் சீருடையை அணிந்து வாக்குகள் சேகரித்தார். இந்திய பாதுகாப்பு படைகளை வைத்து பா.ஜனதா அரசியல் செய்வதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்கின்றன. முன்னாள் ராணுவ வீரர்களும் படைகளை வைத்து அரசியல் செய்வதற்கு என கடும் கண்டனங்களை தெரிவிக்கிறார்கள். இப்போது எல்லாவற்றுக்கும் ஒருபடி மேலாக பா.ஜனதாவின் போஸ்டர்களில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

இதனை கீழ்தரமான அரசியல் என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். டெல்லியில் பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் பா.ஜனதாவின் வேட்பாளராக களமிறங்க போகிறவருடைய புகைப்படத்துடன் போஸ்டர் வைக்கப்பட்டுள்ளது. அதில் அபிநந்தனுடைய புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

“பா.ஜனதா அபிநந்தனின் புகைப்படத்தை அரசியலுக்காக பயன்படுத்துகிறது. பா.ஜனதாவால் வெட்கப்படுகிறோம்,” என்ற வாசகத்துடன் ஒருவர் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களுடைய நடவடிக்கையை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் எல் ராமதாஸ், “அரசியல் லாபத்திற்காக இந்தியப் படைகளை தவறாக பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கையை எடுங்கள்,” என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வுப்பெற்ற அதிகாரி மேஜர் டிபி சிங் பதிவு செய்துள்ள டுவிட் செய்தியில், “எதுவரையில் இந்திய விமானப்படை அரசியலுக்கு இழுப்பீர்கள்? இந்திய விமானப்படையையும், அதனுடைய நடவடிக்கையையும் அரசியலுக்கு இழுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அட்மிரல் ராமதாஸ் எழுதிய கடிதம் சரியான நடவடிக்கையாகும்,” என கூறியுள்ளார்.

பா.ஜனதா அனுமதி அளித்தது?

பத்திரிக்கையாளர் ராம லட்சுமி இதுதொடர்பாக டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் “போஸ்டர்களில் அபிநந்தன் புகைப்படத்தை இடம்பெற செய்ய பா.ஜனதா அனுமதி அளித்ததா?” என கேள்வியை எழுப்பியுள்ளார். இது இந்தியாவின் ஏதோ ஒரு பகுதியில் காணப்படவில்லை. தலைநகர் டெல்லியில் நடந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் பா.ஜனதா எம்.எல்.ஏ. ஓம் பிரகாஷ் சர்மாவும் அபிநந்தன் புகைப்படத்துடன் போஸ்டர் வைத்துள்ளார். இதனையும் நெட்டிசன்கள், செய்தியாளர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி

சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ் பா.ஜனதாவின் புகைப்படத்தை சேர் செய்து தேர்தல் ஆணையத்திற்கு கேள்வியை எழுப்பியுள்ளார்.

“இந்தியப்படையில் பணியாற்றும் வீரரின் புகைப்படத்தை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா? அனுமதியில்லையென்றால் தேர்தல் ஆணையம் நடவடிக்கையை எடுக்குமா? என கேள்வியை எழுப்பியுள்ளார்.

இந்திய விமானப்படை விங் கமாண்ட் இந்தியா முழுவதும் ஹீரோவாகியுள்ளார். அவருடைய பெயரை பா.ஜனதா அரசியலுக்கு பயன்படுத்துவதை பலரும் விமர்சனம் செய்து டுவிட்டரில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பா.ஜனதா கீழ்தரமான அரசியலை செய்கிறது என காட்டமாகவும் பதிவு செய்துள்ளனர். பணியில் இருக்கும் வீரர்களின் பெயரை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தக்கூடாது. அபிநந்தன் என்ன படையில் இருந்து விலகிவிட்டாரா? என்றெல்லாம் கேள்விகள் எழுப்பட்டு வருகிறது.