லண்டனில் சொகுசாக சுற்றும் நிரவ் மோடி…!

Read Time:5 Minute, 29 Second

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்து நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார். இந்தியாவில் அமலாக்கப்பிரிவு, சிபிஐ அவருக்கு எதிரான விசாரணையை மேற்கொண்டு வருகிறது. நிரவ் மோடி இப்போது லண்டன் நகரில் சொகுசாக வலம்வரும் வீடியோ வெளியாகியுள்ளது. மிகவும் காஸ்டிலியான அப்பார்ட்மென்டில் வசிக்கும் அவர், சுமார் 9 லட்சம் மதிப்புள்ள கோட் அணிந்துக்கொண்டு எந்தஒரு பதற்றமும் இன்றி வெளியே ஹாயாக சுற்றுகிறார்.

அவரிடம் `தி டெலிகிராஃப்’ பத்திரிகையின் செய்தியாளர், பல்வேறு கேள்விகளைக் கேட்கிறார். ஆனால், நிரவ் மோடி எந்தக் கேள்விகளுக்கும் பதில் தராமல், நோ கமென்ட்ஸ் என்பதோடு முடித்துக்கொள்கிறார். இப்போது இந்த விஷயம் இந்திய ஊடகங்களில் ஹாட் டாபிக்காக எழுந்துள்ளது. இன்டர்போல் நோட்டீஸ், அமலாக்கப்பிரிவு மற்றும் சிபிஐயின் நாடுகடத்தும் கோரிக்கைகள் நிலுவையில் உள்ள நிலையில் நிரவ் மோடி, லண்டனில் மீண்டும் பெரும் செலவில் வைர வியாபாரத்தை தொடங்கியுள்ளார் எனவும் தெரிகிறது.நிரவ் மோடிக்கு எதிரான சிபிஐ, அமலாக்கப்பிரிவு வழக்குககள் முக்கியத்துவம் வாய்ந்தது. அவருக்கு எதிராக ரெட் நோட்டீஸ் அறிவிப்புகளை வழங்கியபின் இங்கிலாந்து அவர் லண்டனில் இருந்ததை இந்தியாவுக்கு உறுதிப்படுத்தியது. இந்த தகவலின் அடிப்படையில், வெளியுறவு அமைச்சகத்தின் மூலம் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அவரை இந்தியாவிற்கு நாடுகடத்தும் கோரிக்கைகளை முன்வைத்தது. 2018-ம் ஆண்டு ஆகஸ்டில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி வி.கே. சிங் பாராளுமன்றத்தில் தெரிவித்த தகவலில், லண்டனில் உள்ள தூதரகத்தில் சிறப்பு குழுவால் அவரை நாடு கடத்தும் கோரிக்கை இங்கிலாந்திடம் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

நிரவ் மோடி இந்தியாவுக்கு திரும்பி வரும்வரையில் அவருக்கு எதிரான வழக்குகள் அப்படியே நிலுவையில் இருக்கும். இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டதும் இவ்விவகாரம் இந்திய வெளியுறவுத்துறையின் வசம் சென்றுவிடும். இதனையடுத்து இந்திய அரசு தூதரகம் மூலமாக தலைமறைவாக உள்ளவரை இந்தியாவிற்கு கொண்டுவர நடவடிக்கையை எடுக்க வேண்டும். நிரவ் மோடிக்கு எதிராக இன்டர்போல் ரெட் நோட்டீஸ் விடுத்த பின்னரும் லண்டன் தெருக்களில் அவர் சொகுசாக சுற்றுவது, ஒரு மோசமான சம்பவமாகும்.

2019 தேர்தல்களுக்கு தயாராகி வரும் நிலையில் வீடியோ அரசாங்கத்திற்கு தர்மசங்கடத்தையே ஏற்படுத்தும். மோடிக்கு எதிராக செயல்பட இங்கிலாந்துக்கு அழுத்தம் கொடுப்பதில் இந்தியாவின் இராஜதந்திர முயற்சிகள் வெற்றிபெறவில்லை என இது கூறுகிறது.

புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதல், இதனையடுத்து பாகிஸ்தானில் இந்திய விமானப்படையின் தாக்குதல் ஆகிய காரணங்களால் பல்வேறு விவகாரங்கள் காணமல் போயிருந்தது. இப்போது நிரவ்மோடி விவகாரம் தலைப்புச் செய்தியாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் மீண்டும் கேள்விகளை கேட்கத்தொடங்கியுள்ளன. காங்கிரஸ் ஏற்கனவே ஒரு அறிக்கையை வெளியிட்டதுடன், வெளிப்படையாக அரசாங்கத்தை தாக்கியுள்ளது.

லண்டன் நீதிமன்றத்தில் நிரவ்மோடியை நாடு கடத்துவது தொடர்பான செயல்முறை தொடங்கும் வரையில் எங்களுடைய பணி எதுவும் கிடையாது என சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது என செய்திகள் வெளியாகியுள்ளது. இதில் சீக்கிரமாக நடைமுறைகளை தொடங்குவதற்கு இங்கிலாந்திற்கு இந்தியா கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு செய்தியாளரே நிரவ் மோடியை பிடித்துவிட்ட்டார். மோடி அரசாங்கத்தால் முடியவில்லை ஏன்? என காங்கிரஸ் எழுப்பியுள்ளது.

பிற எதிர்க்கட்சிகளும் இவ்விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. சோசியல் மீடியாக்களிலும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.


நிரவ் மோடியின் ரூ.100 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா வெடிவைத்து தகர்ப்பு