ஒரே நிதியாண்டில் திமுக வருமானம் 800% அதிகரிப்பு

Read Time:2 Minute, 59 Second

ஒரே நிதியாண்டில் திமுகவின் வருமானம் 800 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரியவந்துள்ளது.

அரசியல் கட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் வருமான விவரங்களை தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்கிறது. இந்த விபரங்கள் அடிப்படையில் ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற தொண்டு நிறுவனம் பிராந்திய அரசியல் கட்சிகளின் வருமான விவரங்களை வெளியிட்டுள்ளது. இத்தகவலின்படி கடந்த 2017-18 நிதியாண்டில் திமுக ரூ.35.748 கோடி வருமானம் பெற்றுள்ளது. இதுவே, கடந்த 2016-17 நிதியாண்டில் திமுகவின் வருமானம் வெறும் ரூ. 3.78 கோடியாக இருந்தது. இதனால் ஒரே நிதியாண்டில் திமுகவின் வருமானம் 845.71 சதவீதம் உயர்ந்துள்ளது.

பிராந்திய கட்சிகளின் வருமான பட்டியலில் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி முதலிடம் பெற்றுள்ளது. 2017-18 நிதியாண்டில் அக்கட்சியின் வருமானம் ரூ.47.19 கோடியாக இருந்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக திமுக உள்ளது. அதேசமயம் தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவின் வருமானம் கடும் சரிவை கண்டுள்ளது. 2017-18 நிதியாண்டில் ரூ.12.72 கோடி வருமானம் பெற்றுள்ளது. இதுவே 2016-17-ல் அதிமுக பெற்ற வருமானம் ரூபாய் 48.78 கோடியாகும். கடந்த நிதியாண்டில் அதிமுகவின் வருமானம் 74 சதவீதம் சரிவு கண்டுள்ளது.

கடந்த 2017-18 நிதியாண்டில் 37 மாநில கட்சிகளின் மொத்த வருமானம் ரூ.237.27 கோடியாகும். இவற்றில் முதல் மூன்று இடங்களை சமாஜ்வாடி, திமுக, தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி பெற்றுள்ளது. இக்கட்சிகளின் மொத்த வருமானம் 110.21 கோடி (46.45%) ஆகும். அதேசமயம் 2017-18 நிதியாண்டில் திமுக செலவு செய்துள்ள தொகை ரூ.27.47 கோடி ஆகும். இதிலும் சமாஜ்வாடி கட்சி தான் முதலிடத்தில் உள்ளது. சமாஜ்வாதி கட்சி 2017-18 நிதியாண்டில் மொத்தமாக செலவு செய்துள்ள தொகை ரூ.34.53 கோடி ஆகும்.

பாட்டாளி மக்கள் கட்சியின் வருமானம் 1.173 கோடி ரூபாயாகும், இதுவே செலவு 1.219 கோடியாகும். ‘கேப்டன்’ விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் வருமானம் 87.8 லட்சம், செலவு 46.6 லட்சம் ஆகும். பாட்டாளி மக்கள் கட்சியின் வருமானத்தில் 67% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. விஜயகாந்த் கட்சியின் மொத்த வருவாயில் 5% உயர்வு காணப்படுகிறது.