ராணுவ வீரர்களின் படங்களை பயன்படுத்துக்கூடாது அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

Read Time:2 Minute, 32 Second

அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசார விளம்பரங்களில் ராணுவ வீரர்களின் படங்களை பயன்படுத்துக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

2019 தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. போஸ்டர்கள், டிஜிட்டல் விளம்பரங்களில் அரசியல் கட்சிகள் முக்கியத்தும் காட்டுகிறது. பா.ஜனதா சார்பில் வைக்கப்படும் போஸ்டர்கள் இந்திய படைகளின் புகைப்படம் மற்றும் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனின் புகைப்படம் இடம்பெற்றது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.


பா.ஜனதாவின் போஸ்டர்களில் அபிநந்தன் புகைப்படம்… நெட்டிசன்கள் விமர்சனம்


இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களுடைய நடவடிக்கையை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்திய விமானப்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் எல் ராமதாஸ், “அரசியல் லாபத்திற்காக இந்தியப் படைகளை தவறாக பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கையை எடுங்கள்,” என தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார். தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இந்நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசார விளம்பரங்களில் ராணுவ வீரர்களின் படங்களை பயன்படுத்துக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ராணுவ தளபதி, ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் ராணுவ விழாக்கள் தொடர்பான புகைப்படங்களை தேர்தல் தொடர்பான விளம்பரங்களுக்கோ, பிரசாரத்துக்கோ எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது. இது தொடர்பாக கட்சியினருக்கும், வேட்பாளர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த கட்சிகளின் தலைவர்கள் அறிவுறுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.