லண்டனில் பார்த்ததால் உடனே நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வர முடியாது…

Read Time:3 Minute, 18 Second

லண்டனில் பார்த்ததால் உடனே நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டுவர முடியாது என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவால் தேடப்படும் வங்கி மோசடி குற்றவாளி நிரவ் மோடி லண்டனில் சொகுசாக வலம் வருகிறார்.

மாதத்துக்கு ரூ.15.48 லட்சம் வாடகையில் (17 ஆயிரம் பவுண்ட்) உள்ள 3 படுக்கை அறை கொண்ட அடுக்குமாடி வீட்டில் நீரவ்மோடி வசித்து வருகிறார். லண்டனில் புதிதாக வைர வியாபாரத்தையும் செய்து வரும் நீரவ் மோடி, தனது கெட்-அப்பை மாற்றி மீசையுடன் வலம் வருகிறார். நீரவ் மோடிக்கு இங்கிலாந்து அரசு சார்பில் வேலைவாய்ப்பு மற்றும் ஓய்வூதிய எண், அதாவது தேசிய காப்பீடு எண் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இங்கிலாந்தில் சட்டப்பூர்வமாக நிரவ் மோடி பணியாற்ற முடியும், இங்கிலாந்தில் வங்கிக்கணக்குகளை தொடங்கிப் பயன்படுத்த முடியும் என்றும் தி டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது.

லண்டனில் இருந்து வெளியாகும் டெலிகிராப் பத்திரிக்கை வெளியிட்ட வீடியோவில், முகத்தில் மீசையுடன், ரூ.9 லட்சம் மதிப்புள்ள ஆஸ்ட்ரிச் கோட்சூட் அணிந்து நீரவ் மோடி காணப்படுகிறார். இங்கிலாந்து அரசிடம் அடைக்கலம் கேட்பீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, மன்னித்துக்கொள்ளுங்கள், எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்க இயலாது ” என கூறிவிட்டு சென்றுவிடுகிறார். இவ்விவகாரத்தை முன்வைத்து அரசியல் கட்சிகள் மத்திய அரசை விமர்சனம் செய்து வருகிறது.

இதற்கிடையே நிரவ் மோடியை நாடு கடத்தி கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் பேசுகையில், நிரவ் மோடி இங்கிலாந்து நாட்டில்தான் உள்ளார் என்பது தெரியும். இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என இங்கிலாந்து அரசிடம் நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம். நிரவ்மோடியை லண்டனில் பார்த்ததால், உடனே அவரை இந்தியாவுக்கு கொண்டு வர முடியாது. அதற்கான நடைமுறைகள் ஏற்கனவே நடந்து வருகிறது, அது குறித்து இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருகிறது என தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று நிரவ் மோடியை நாடு கடத்தும் விவகாரத்தை இங்கிலாந்து உள்துறை செயலாளர் சட்டக்குழுவிற்கும், நீதிமன்றத்திற்கும் அனுப்பியுள்ளார் என இந்திய விசாரணை முகமைகளின் தகவல் வெளியாகியுள்ளது.