கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னம் ஒதுக்கீடு

Read Time:3 Minute, 9 Second

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் வழங்கப்படுகிறது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுகிறது. மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடுவதற்கு கடந்த வாரங்களில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், ராமநாதபுரம், தென்சென்னை, திருப்பூர் முதலான தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என பலரும் விருப்ப மனுக்களை அளித்திருந்தனர். கமல்ஹாசன் திமுக, அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என தெரிவித்துவிட்டார். காங்கிரசுடன் பேசினார். ஆனால் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி வைத்தது. இதனால் மக்கள் நீதி மய்யம் தனியாக போட்டியிட உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. 40 தொகுதியிலும் ஒரே சின்னத்தை வழங்குமாறு மக்கள் நீதி மய்யம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்போது பேட்டரி டார்ச் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்துள்ள கமல்ஹாசன், “மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் மிகவும் பொருத்தமானது. தமிழகத்தில் புதிய சகாப்தத்திற்கும், இந்திய அரசியலுக்கும் பேட்டரி டார்ச் சின்னம் புதிய ஒளி பாய்ச்சும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு “பேட்டரி டார்ச்” சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. பொருத்தமான சின்னம் தான். மக்கள் நீதி மய்யம் தமிழ்நாட்டிற்கும் இந்திய அரசியலுக்கும் ஒளி தரும் புது விளக்காய் இன்று முதல் மிளிரும் என தமிழில் பதிவு செய்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தேர்தலுக்கான பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். கஜா புயலின்போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக மேற்கொண்டனர். சின்னம் ஒதுக்கப்பட்ட பின்னர் நம் நாடு பிரகாசம் அடைய பேட்டரி டார்ச் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.