போயிங் 737 MAX 8 விமானங்களை ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்த சீனா தடை

Read Time:2 Minute, 24 Second

போயிங் 737 MAX 8 விமானங்களை ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பயன்படுத்த சீனா தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

எத்தியோப்பியாவில் இருந்து கென்ய தலைநகர் நைரோபி நோக்கி சென்ற எத்தியோப்பின் ஏர்லைன்ஸ் விமானம் விபத்தில் சிக்கியது. இதில் பயணித்த 149 பயணிகள், 8 ஊழியர்கள் என மொத்தம் 157 பேரும் உயிரிழந்துவிட்டனர். விபத்தில் சிக்கியது போயிங் 737 MAX 8 விமானம் என தெரியவந்தது. விமானம் தரையிலிருந்து புறப்பட்ட 6 நிமிடங்களில் விழுந்து சிதறியது.

இரண்டாவது விபத்து

போயிங் 737 MAX 8 விமானம் எதிர்க்கொண்ட இரண்டாவது விபத்து சம்பவம் இதுவாகும்.

அக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் 737 MAX 8 விமானம் விபத்துக்குள் சிக்கியது. ஜகார்த்தா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 13 நிமிடங்களில் விமானம் விபத்தில் சிக்கி பயணிகள், பணியாளர்கள் என 189 பேர் உயிரிழந்தனர்..

சீனா தடை விதிப்பு

போயிங் 737 MAX 8 விமானம் தொடர்ந்து விபத்தில் சிக்குவதால் இவ்வகை விமானங்களை பயன்படுத்தக்கூடாது என சீனா உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் உள்ள விமான நிறுவனங்கள் போயிங் 737 MAX 8 விமானங்களை பயன்படுத்துவதை மாலை 6 மணிக்குள் நிறுத்திவிட வேண்டும் என அந்நாட்டு விமான போக்குவரத்து துறை அமைச்சம் உத்தரவிட்டுள்ளது.

போயிங் நிறுவனத்தின் புதிய வரவான 737 MAX 8 விமானங்கள் 2017-ம் ஆண்டில் சேவைத் துறையில் நுழைந்தது.

போயிங் மற்றும் அமெரிக்காவின் ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) விமானப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்த பிறகு விமானத்தை பறக்க அனுமதி வழங்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது. இரு விமானங்களுமே தரையிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கியுள்ளது, இதுதொடர்பாக போயிங் பதில் அளிக்க மறுத்துவிட்டது.