2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா? கமல்ஹாசன் பதில்

Read Time:1 Minute, 39 Second

2019 நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த் ஆதரவு கொடுப்பார் என கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுகிறது. மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடுவதற்கு கடந்த வாரங்களில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், ராமநாதபுரம், தென்சென்னை, திருப்பூர் முதலான தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என பலரும் விருப்ப மனுக்களை அளித்திருந்தனர். மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. நேற்று கட்சியின் வக்கீல் அணி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனையை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். ரஜினிகாந்த் ஆதரவு கொடுப்பார் என்று நம்பிக்கை இருக்கிறதா? என்ற கேள்விக்கு நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். பார்க்கலாம் என்றார். 21 தொகுதி இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும். அதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலில் நான் கண்டிப்பாக போட்டியிடுவேன். எங்கே என்பதை பின்னர் தெரிவிக்கிறேன் என கூறியுள்ளார்.