தேர்தல் பிரச்சாரத்தில் சபரிமலை விவகாரம்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

Read Time:2 Minute, 15 Second

கேரளா பிரசாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அனைத்து வயதுப்பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தொடர்ந்து கடந்த 3 மாத காலமாக கேரள மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள், பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தினர். சபரிமலை விவகாரம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஏப் 23 ம் தேதி தேர்தல் நடைபெற்று, மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரத்தில் சில அரசியல் கட்சிகள் சபரிமலை விவகாரத்தை கையில் எடுக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் மத உணர்வு சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தை தேர்தலில் பயன்படுத்த கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரள மாநில தலைமை தேர்தல் அதிகாரி டீகா ராம் மீனா செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘சபரிமலை விவகாரத்தை தேர்தல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்தக்கூடாது. இது தேர்தல் நடத்தை விதிமீறல்களுக்கு எதிரானது. பிரச்சாரத்தில் சபரிமலை விவகாரத்தை பேசி மத உணர்வுகளை தூண்டிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என கூறியுள்ளார்.

“இவ்விவகாரம் தொடர்பாக நாளை அரசியல் கட்சிகளிடம் பேச உள்ளேன். வாக்குகளைப் பெற மத உணர்வு அல்லது மத பாரம்பரியங்களை தேவையற்ற முறையில் பயன்படுத்த வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்வேன், இது மக்களிடையே சில மதபதட்டங்களை ஏற்படுத்தும். இது நடந்தால் பொறுப்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” எனவும் குறிப்பிட்டார்.