வேட்பாளர்கள் கிரிமினல் குற்றங்களை டி.வி., பத்திரிக்கையில் வெளியிட வேண்டும்…!

Read Time:3 Minute, 0 Second

2019 தேர்தலில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களின் கிரிமினல் குற்ற விபரங்களை தொலைக்காட்சி, பத்திரிக்கைகளில் வெளியிட வேண்டும்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுவை தாக்கல் செய்த பின், தங்களின் குற்றப்பின்னணி குறித்து நாளேடுகள், தொலைக்காட்சிகளில் விளம்பரம் கொடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இவ்வாறு கொடுக்கப்படும் விளம்பரங்களை பார்த்து மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய உதவியாக இருக்கும் என்றது.

இதனையடுத்து இதனை உறுதிசெய்யும் வகையில் தேர்தல் ஆணையம், வேட்பாளர்களின் பிரமாண பத்திரம் 26-ன் வடிவத்தை மாற்றி அமைத்தது. அதன்படி பிரமாண பத்திரத்தில் பதிவு செய்த நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுக்க வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் குறைந்த பட்சம் மூன்று முறை இந்த தகவலை வெளியிட்டிருக்க வேண்டும். இந்த தேர்தலில் இம்முறை அமலுக்கு வருகிறது. 26 படிவத்தை தாக்கல் செய்யவில்லை என்றால் வேட்பு மனு நிராகரிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


எத்தனை கிரிமினல் வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எத்தனை வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்பதையும் அரசியல் கட்சிகளிடம் வேட்பாளர்கள் தெரிவிக்க வேண்டும். இதை அரசியல் கட்சிகள் தங்களின் இணையதளங்களில் பதிவிட வேண்டும்.


குற்றப்பின்னணி குறித்த தகவல்களை நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்கள் அளிக்கப்பட்டதற்கான சாட்சிகளையும், ஆதாரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர்கள் ஒப்படைக்க வேண்டும்.


கிரிமினல் குற்றங்கள் குறித்து விளம்பரம் செய்யும் வேட்பாளர்கள் அதற்குரிய செலவை அவரோ அல்லது அவர் சார்ந்திருக்கும் கட்சியோ ஏற்க வேண்டும், அது தேர்தல் செலவுக் கணக்கில் வரும்.


வேட்பாளர்களின் கிரிமினல் குற்றங்கள் குறித்து சம்பந்தப்பட்ட கட்சித்தலைமையும் விளம்பரப்படுத்த வேண்டும். அது குறித்த தகவல்களை தங்கள் இணையதளத்தில் வெளியிட்டு இருக்க வேண்டும். தவறும் கட்சிகள் மீது அங்கீகாரம் ரத்து, இடைநீக்கம் போன்ற நடவடிக்கைகள் பாயும் என தேர்தல் கமி‌ஷன் கூறியுள்ளது.