விமர்சனம் செய்த அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறீர்களே? பிரேமலதா பதில்

Read Time:3 Minute, 17 Second

அ.தி.மு.க. கூட்டணியில் இணைய முதலில் 12 தொகுதிகளை கேட்டு வந்த தே.மு.தி.க. பிறகு 7 தொகுதிகளுக்கு இறங்கி வந்தது. அதேநேரத்தில், எதிர்க்கட்சியான தி.மு.க.விடமும் கூட்டணி பேச்சுவார்த்தையை தே.மு.தி.க. நடத்தியதால், அ.தி.மு.க. தரப்பில் அதிருப்தி ஏற்பட்டது.

கூட்டணி கதவை மூடி, தி.மு.க.வும் கையை விரித்து விட்டது. இதனால் தே.மு.தி.க.வுக்கு அ.தி.மு.க.வே கதி என்ற நிலை ஏற்பட்டது. பிரேமலதா விஜயகாந்த் இடையில் தி.மு.க.வை விமர்சனம் செய்தார். அ.தி.மு.க.வையும் வம்புக்கு இழுத்தார். அ.தி.மு.க. எம்.பி.க்கள் 37 பேரால் தமிழகத்துக்கு நன்மை என்ன? என கேள்விகளை எழுப்பினார். இதனால் தேமுதிக தனித்து போட்டியிடுமா? என்ற கேள்வி எழுந்தது. நீண்ட இழுபறிக்கு பின்னர் அதிமுக – தேமுதிக இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என அதிமுக தெரிவித்துள்ளது. நடைபெற உள்ள 21 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு தே.மு.தி.க. தனது முழு ஆதரவை அளிக்கும் என்று தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. பின்னர் இரு கட்சி தலைவர்களும் செய்தியாளர்களிடம் பேசினர்.

பிரேமலதாவிடம், தொடர்ந்து விமர்சனம் செய்த அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்திருக்கிறீர்களே? என செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதில் அளிக்கையில், என்னுடைய கருத்து தவறாக திரித்து கூறப்பட்டது. அதற்கான விளக்கத்தை முதல்-அமைச்சரும், அமைச்சரும் தெளிவாக புரிய வைத்து விட்டார்கள். அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த இன்றைய தினமே நல்ல நாளாகும். நாங்கள் எப்போதும் வெற்றிக்கூட்டணிதான். 2011 தேர்தலில் ஜெயலலிதாவும், விஜயகாந்தும் இணைந்து மிகப்பெரிய வெற்றியை நிலைநாட்டினார்கள். அதுபோல இப்போதும் நாளை நமதே, நாற்பதும் நமதே என்று சொல்லக்கூடிய வகையில் 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றியை நாங்கள் பெறுவோம்.

21 சட்டமன்ற தொகுதிகளிலும் நாங்கள் அ.தி.மு.க.வுக்கு முழு ஆதரவு கொடுப்போம். அதன் பின்னர் வருகிற உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும். இந்த ஆட்சிக்கு அனைத்து விதத்திலும் தே.மு.தி.க. முழு ஆதரவு அளிக்கும். தொகுதி உடன்பாட்டில் மனநிறைவு பெற்றுள்ளோம் என கூறியுள்ளார். விஜயகாந்த் பிரசாரம் செய்வார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.