மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் பங்குனி மாத பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Read Time:6 Minute, 8 Second

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி மாத பெருவிழா இன்று (11-ம் தேதி) கொடியேற்றத்துடன்  தொடங்கியது. வரும் 17ம் தேதி தேர் திருவிழாவும், 18ம் தேதி அறுபத்து மூவர் திருவிழாவும் நடைபெற உள்ளது.

அன்னை பார்வதி மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டதும், முருகவேள், நான்முகன், வேதம், சுக்கிரன், ராமர் வழிபட்டு பேறு பெற்ற கோவில் மயிலாப்பூர் கற்பகம்மாள் உடனாகிய கபாலீசுவரர் கோவில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பெருவிழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது.

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றம்

பூம்பாவை உயிர்பிப்பு

இக்கோவிலில் நடைபெறும் பங்குனிப் பெருவிழா சிறப்புடையது. அதில் எட்டாம் நாள் விழாவாக நடைபெறும் அறுபத்து மூவர் விழா உலகப்புகழ் பெற்றது. அன்று நடைபெறும் பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சி விழாவும் மிகவும் புகழ்பெற்றது.

சிவநேசர் என்னும் சிவபக்தர், தனது மகள் பூம்பாவையை திருஞானசம்பந்தருக்குத் திருமணம் செய்துவைக்க விரும்பினார். ஆனால். விதிவசமாக பூம்பாவை பாம்பு தீண்டி இறந்துவிட்டாள். அவளுடைய அஸ்தியை ஒரு குடத்தில் வைத்து, திருஞானசம்பந்தரின் வரவுக்காகக் காத்துக்கொண்டிருந்தார் சிவநேசர். திருஞானசம்பந்தர் மயிலைக்கு வந்திருப்பதைக் கேள்விப்பட்ட சிவநேசர், அஸ்தி குடத்தை எடுத்துக்கொண்டு வந்து திருஞானசம்பந்தரைப் பணிந்து வணங்கி, நடந்த சம்பவத்தைக் கூறினார்.

திருஞானசம்பந்தர் சிவபெருமானை வணங்கி,
`மட்டிட்ட புன்னையங்கானல் மடமயிலைக்
கட்டிட்டங்கொண்டான் கபாலீச்சரமமர்ந்தான்
ஒட்டிட்டபண்பினுருத்திர பல்கணத்தார்க்கு
அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்…’
என்ற பதிக்கத்தைப் பாடி இறந்துபோன பூம்பாவையை உயிர்த்தெழச் செய்கிறார்.

தன்னுடைய பக்தராக இருந்தாலும், சிவநேசரின் மகளைத் தாமே உயிர்ப்பிக்காமல், தம்மையே பாடிப் போற்றும் திருஞானசம்பந்தரின் அருளால் உயிர்த்தெழச் செய்து, சிவபெருமானும் தம் அடியார்களின் பெருமையை திருஞானசம்பந்தர் மூலம் இந்தத் தலத்தில் உலகத்தவர்க்கு உணர்த்தியருளினார் என்பதால்தான் மயிலையில் நடைபெறும் அறுபத்து மூவர் விழா தனிச் சிறப்பு கொண்டதாகப் போற்றப்படுகிறது.

பங்குனி விழா.

விஷம் தீண்டி இறந்த பூம்பாவைக்கு உயிர் கொடுத்ததன் மூலம் அவள் எனக்கு மகள் ஆகின்றாள் என்று கூறி, சிவநேசரின் கோரிக்கையை சம்பந்தர் நிராகரித்துவிடுகிறார். பூம்பாவை தன் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருந்து இறைவன் தொண்டுசெய்து, பின் முக்தி அடைந்தாள். இக்கோவில் மேற்கு கோபுரம் அருகில் பூம்பாவைக்கு சந்நிதி இருக்கிறது. அருகில் சம்பந்தர் இருக்கிறார். சம்பந்தர், பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சி, பங்குனி பிரம்மோற்ஸவத்தின் 8-ம் நாள் காலையில் நடக்கிறது. அப்போது சம்பந்தர், பூம்பாவை, சிவநேசர் மற்றும் உற்சவமூர்த்திகள், கபாலி தீர்த்தத்துக்கு எழுந்தருள்கின்றனர்.

அறுபத்து மூவர் திருவிழா

ஒரு கும்பத்தில் அஸ்திக்குப் பதிலாக நாட்டுச்சர்க்கரை வைத்து, சம்பந்தரின் பதிகம் பாடப்படுகிறது. பின்பு பூம்பாவாய் உயிருடன் எழுந்ததை பாவனையாகச் செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சியைப் பார்த்தால் தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரரையும் அறுபத்து மூவரையும் பங்குனி விழாவில் தரிசிப்போம். நினைத்த காரியத்தின் தடைகளையெல்லாம் தகர்த்து, காரியம் யாவிலும் துணை நின்று அருளுவார் கபாலீசுவரர் பெருமான்.

பங்குனி மாத பெருவிழா

திங்கள்கிழமை காலை 6.40 முதல் காலை 7.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. இதையடுத்து 13-ம் தேதி அதிகார நந்திக் காட்சி, திருஞான சம்பந்தர் திருமுலைப்பால் விழா நடைபெறும். இதைத் தொடர்ந்து 14 ம் தேதி வெள்விடை பெருவிழா காட்சி நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா 17-ம் தேதி நடைபெறும். அன்றைய தினம் காலை 6 மணிக்கு கபாலீசுவரர் தேரில் எழுந்தருள்கிறார். ஐந்திருமேனிகள் விழாவும் அதே நாளில் நடைபெறவுள்ளது. 18ம் தேதி அறுபத்து மூவர் திருவிழாவும் நடைபெற உள்ளது.

20-ம் தேதி தீர்த்தவாரி உற்சவமும், புன்னை மரத்தடியில் சிவ வழிபாடு ஆகிய நிகழ்ச்சிகளும், இரவு 8 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும். பின்னர் கொடியிறக்கத்துடன் விழா நிறைவுபெறும்.

இதையடுத்து மார்ச் 22-இல் விடையாற்றி உற்சவம் நடைபெறும் என கபாலீசுவரர் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.